பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை - 369

தீர்க்கும் மருந்தும் ஆகியது; இவ்வாறு எல்லாம் எண்ணி அவ்வீரர்கள் மகிழ்ந்தனர். தமது துணைவியரை நண்ணி அவர்தம் பேரழகில் ஆழ்ந்து இன்பங் கண்டனர். கண்கள் உரையாடின; மூரல் அவர்களை மகிழச் செய்தது; கொங்கைகள் அவர்கள் மார்பினை அணைந்து இன்பம் தந்தன.

இசை பாடும் அழகிய மகளிரைக் கொண்டு யாழ் எடுத்து இசை கூட்டிப் பாலை, குறிஞ்சி முதலிய பண்கள் பல பாட வைத்தனர். அவர்களுக்கு அவர் மனைவியர் புதிய இன்பங்களைக் கூட்டு வித்தனர்.

திங்கள் நிலவு வீசி அவர்கள் அரங்குகளையும் படுக்கை முற்றங்களையும் குளிர்வித்தது. காமன் தன் கணைகளைத் தொடுத்து அவர்கள் காதல் இன்பத்தை மிகுவித்தான்; கிளர்ச்சிகள் பெறச் செய்தான்; வீரர்கள் மகிழ்வு கண்டனர்.

அந்த இன்ப இரவில் செங்குட்டுவன் தன் அரசியோடு அமர்ந்திருந்தான். சாக்கையன் என்னும் கூத்தன் உமைய வளோடு சிவன் ஆடிய கொடிகொட்டி என்னும் ஆடலை ஆடிக் காட்டி அரசனை மகிழ்வித்தான்.

அத்தாணி மண்டபத்தில் அரசன்

அதன்பின் அரசவை கூடும் அத்தாணி மண்டபத்தைச் சேரன் அடைந்தான்.

கஞ்சுக மாக்கள் நீலனைத் தலைவனாகக் கொண்டு வஞ்சி மன்னன் முன் வந்து சேர்ந்தனர். உடன் மாடலனும் வந்திருந்தான். அவர்கள் செய்தி கொண்டு செப்பக் காத்திருந் தனர். சோழன் மூதூர் ஆகிய புகார் நகரத்திற்குச் சென்றதையும், அங்கு அவன் சித்திர மண்டபத்தில் வீற்றிருந்ததையும், அவனிடம் தாம் ஆரிய மன்னரை அழைத்துச் சென்று காட்டியதையும், அதற்கு அவர்கள் உரைத்த மாற்றத்தையும் விளம்பினர்.

'வீரத்தைக் களத்தில் போட்டுவிட்டு வெறுங்கை யராகத் தவசிகள் கோலத்தில் தப்பிச் சென்றவர்களை மடக்கிப் பிடித்து வந்தது மடமை என்று சோழ அரசன் கூறினான்' என்றனர்.