பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 வரந்தரு காதை

என்று தேவந்தியை நியமித்தான். கோயிலை மும்முறை வலம் வந்து வணங்கி வழிபாடு செய்து பிற செயல்களில் மனம் செலுத்தினான்.

சிறையிலிருந்து விடுபட்ட ஆரிய அரசர்கள் ஆகிய கனக விசயரும், ஏனைய சிறைக் கைதிகளும் வந்திருந்து தெய்வ வழிபாடு செய்தனர். கண்ணகித் தெய்வத்தை வணங்கித் தெய்வ அருள் பெற்றவராகி அவரவர் தம் நாடும் நகரும் போய்ச் சேர்ந்தனர்.

இந்த விழாவுக்கு ஏனைய அரசர்கள் பலரும் வந்திருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் குடகு நாட்டுக் கொங்கர், மாளுவ அரசர், இலங்கை அரசன் கயவாகு ஆவர். அவர்கள் கண்ணகித் தெய்வத்தைத் தம் நாட்டில் இமய வரம்பன் ஆகிய செங்குட்டுவன் நடத்தும் வழிபாட்டு விழாக்களில் வந்து இருந்து அருள் செய்தது போலத் தம் நாட்டில் நடத்த இருக்கும் விழாக்களிலும் வந்திருந்து அருள் செய்யுமாறு தெய்வத்தை வேண்டினர். "தந்தேன் வரம்' என்று வான்குரல் ஒன்று எழுந்தது; கண்ணகியின் வாக்கை அவர்களைக் கேட்க வைத்தது.

இக்குரல் ஒலியைக் கேட்ட சேர அரசனும், ஏனைய அரசர்களும் தத்தம் படைத்திரளோடு இருந்து கண்ணகித் தெய்வத்தை ஏத்தி வழிபட்டு மன நிறைவோடு தெய்வ வீடு கண்டவர் போல் விம்மிதம் எய்தினர். அரசர்கள் சேரனை அரசனை வணங்கிப் போற்றினர்.

சேரனும் முன் மாடலன் தெரிவித்தபடி அவனுடன் சேர்ந்து வேள்விச் சாலை நோக்கிச் சென்றான்; வேள்வி முடித்து அதன் பயனைக் காண்பது என்பது அவன் குறிக்கோள் ஆகியது.

இளங்கோவடிகள் வரலாறு

இதனை அடுத்து இளங்கோவடிகளும் பத்தினிக் கடவுள் முன் சென்று நின்றார். அவர் எதிரே தேவநீதி மேல் கண்ணகி வந்து பேசினாள். கண்ணகி இளங்கோவின் இளமை வரலாற்றை எடுத்து இயம்பினாள்.