82
னார்கள். வடநாட்டு அரசர்களும், கொங்குநாட்டு மன்னரும், மாளுவ வேந்தரும், இலங்கையிலிருந்து வந்திருந்த கயவாகு வேந்தனும், “பத்தினிக் கடவுளே! எங்கள் நாட்டிலும் உன்னை நிறுவி வணங்க எண்ணியிருக்கிறோம். இங்கே நீ இருந்து அருள் செய்தது போல அங்கும் எழுந்தருளி வரம் தர வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள். “அவ்வாறே தந்தேன் வரம்” என்று ஒரு குரல் வானில் எழுந்தது. யாவரும் மனம் உருகி அத்தெய்வத்தை வாழ்த்தினார்கள். செங்குட்டுவன் அங்கிருந்து அகன்றான்.
அதன் பின்பு இளங்கோவடிகள் கோயிலுக்கு வந்தார். கண்ணகியை வாழ்த்தி வணங்கினார். அப்போது தேவந்தியின்மேல் கண்ணகி ஆவேசமாக வந்து, இளமையில் இளங்கோவடிகள் துறவுபூண்ட வரலாற்றை எடுத்துரைத்தாள்; “செங்குட்டுவனுக்கு உண்டான கவலையை நீக்கி, இந்தப் பூபாரம் எனக்கு வேண்டாம் என்று துறந்து, சிந்தை செல்லாத பேரின்ப அரசை ஆள்கின்ற வேந்தன் நீ அல்லவோ?’ என்று பாராட்டினாள். இளங்கோவடிகள் பத்தினித் தெய்வத்தைப் பரவிப் பாடினார்.