பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சுழலில் மிதக்கும் தீபங்கள்


கேட்டுக் கொண்டதன் பேரில் வெளியே ஒரு தொட்டியும் குழாயும் பின் பக்க வராந்தா போன்ற சிறு பகுதியில் வைத்துக் கொடுத்து விட்டு மூவாயிரத்தை மூவாயிரத்தைந் நூறாக மாற்றினான் வீட்டுக்காரன்.

வேலைக்காரி துலக்கிய பாத்திரங்களை மீண்டும் நீரூற்றிக் கழுவிக் கவிழ்த்து வடிந்த பிறகே உள்ளே எடுத்துச் செல்லலாம். சிறுவர் உடைகளை அவள் துவைத்துப் பிழிந்து மொட்டை மாடியில் உலர்த்தினால், அவளே மாலை நான்கு மணிக்கு வந்து எடுத்து மடித்து வைப்பாள். பள்ளிச் சீருடைகளை அவளே எடுத்துச் சென்று மாலை வரும் போது பெட்டி போட்டுக் கொண்டு வருவாள்.

தலை போனாலும் கிரிஜா, குழந்தைகளின் துணிகளையோ, வேறு மடியில்லாத திரைச் சீலை போன்ற துணிகளையோ தொடலாகாது. மாமியார் இரவு ‘ஆகாரம்’ பண்ணி முடியும் வரையிலும், இவள் பெண்களின் மேல் பட்டுக் கொள்ளவும் கூடாது. பரத்துக்கு மட்டும் விலக்கு. துணி படாமல் தொடலாம். ‘பொன் முடிந்த’ துணிக்கும், புத்திரனுக்கும் தீட்டு இல்லை!

“தீதிஜி இன்று சாயங்காலம் நான் வர மாட்டேன்!”

பாத்திரங்களைச் சுத்தமாக கழுவி துடைத்துக் கவிழ்த்த வண்ணம் வேலைக்காரி மாயா சொல்கிறாள்.

“ஏன்?’’

“குழந்தைக்கு உடம்பு சரியில்லை தீதிஜி, டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போகணும்!”

“என்ன உடம்பு? நேத்துத் தெரு நாயைத் தொட்டு விளையாடிட்டிருந்தான். உனக்கு எத்தனைநாள் அந்த நாயைத் தொட விடாதேன்னு சொல்றேன், மாயா? அது சொறி நாய்!”

“ஹா, சொன்னா கேக்கறதில்ல தீதிஜி. ராத்திரியெல்லாம் காச்சல்...சீட்டு வாங்க ஒரு ரூபா தரணும் தீதிஜி!”