பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சுழலில் மிதக்கும் தீபங்கள்

காப்பல. அசைய முடியாதுன்னுட்டார். அடுத்த வாரம் தான் பார்க்கணும்...”

“எனக்குக்கூட பார்க்கணும்னு இருக்கு எல்லாத்துக்கும் குடுப்பின வேணும் ரோஜா. நினைச்சாப்பல எங்க நடக்கறது.”

“உங்களுக்கென்ன பாட்டி, சாமு வந்ததும் கார்லயே ஒரு நடை போயிட்டு வந்துடலாமே? இல்லாட்டா இருக்கவே இருக்கு எங்க கூட வந்துடுங்கோ!”

“என்னமோ, பெத்த பெண்ணுக்கு மேல நீதான் கவனிச்சிக்கிற?”

“இது என்ன பிரமாதம்? உங்களப் பார்க்கறது எனக்கென்னவோ தாயாரப் பார்க்கிறாப்பில இருக்கு, பெரியவாளுக்குச் செய்யக் குடுத்து வச்சிருக்கணும். கோதுமைப் பாலெடுத்து இதை கிளறினேன், ஆறித் துண்டு போடக்கூட நிற்காம அவசரமா இத்தனை டப்பியில போட்டு எடுத்துண்டு வரேன். வாயில போட்டுண்டு பாருங்கோ...இவாள்ளாம் கோவாவும் பன்னிரும் கடையில வாங்கிப் போடுவா. உங்களுக்குத் திங்கறதுக்கில்ல. அதுக்காக நான் தனியாவே ரெண்டு பாக்கெட் பாலை வாங்கிக் கோவா கிளறினேன்...”

மாமியார் அவள் கொண்டு வந்து கொடுக்கும்: பண்டத்தை வாயில் போட்டுக் கொள்கிறாள்.

“நீ பண்றதுக்குக் கேக்கணுமா ரோஜா? பத்து விரலும் பத்துக் காரியம். அம்ருதமாக இருக்கு...” கிரிக்குப் பொறுக்க வில்லை. அந்த வாயிற்படியில் போய் நிற்கிறாள்.

“மாமி எப்ப வந்தாப்பல? உங்களுக்கு அம்மாவப் பார்த்துட்டுப் போனாப் போறும்...!”

“உனக்குத்தான் சிநேகிதி யாரோ வந்திருக்காப்பல... ‘பிஸி’யாக இருக்கே?”