பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சுழலில் மிதக்கும் தீபங்கள்


முடியாதபோது என்ன வேண்டியிருக்கு? எனக்கு நீ உபசாரம் பண்ண வேண்டாம். போ!”

ஒரு பிரளயமாகும் ஆவேசம் அவளுள் கிளர்த்தெழுகிறது.

“நான் அவா மேல இவா மேல பட்டிருப்பேன். முழுகித் தொலைக்கலங்கறேளா” என்று சொற்கள் வெடித்து வரத் தயாராக இருக்கின்றன. உதட்டைக் கடித்துக் கொள்கிறாள். கிரிஜா பொறுப்பாள். ஆனால் அரணை உடைத்து விட்டால் பிறகு சமரசத்துக்கு இடமில்லை. அரண் அவளை உள்ளே இழுக்கிறது. தள்ளிக் கதவைச் சாத்துகிறது.

சமையலறையில் கொண்டு வந்து அவற்றைத் திரும்ப வைக்கிறாள். ரத்னாவும் குழந்தைகளும் வரும் கலகலப்பு செவிகளில் விழுகிறது.

“ஹாய் மம்மி! உனக்கு வெஜிடயிள் பஃப் கரம் கரமா வாங்கிட்டு வந்திருக்கிறோம் ..”

“சாதாரணமாக என்றேனும் அவர்கள் வெளியில் சென்று இதுபோல் எதையேனும் வாங்கி வந்தால் கிரிஜா ஒதுங்கிக் கொள்வாள். “போதும் மேலே வந்து விழனுமா? உள்ள கொண்டு வை!...” என்பாள்.

குழந்தைகளோடு தானும் இம்மாதிரி ஒரு குழந்தையாக உண்டு களிக்கும் நாட்கள் இவள் குடும்பத்துக்கு வரவே யில்லை.

“கிரி, குழந்தைகள் ஆசையா அம்மாவுக்கு வாங்கிட்டு வந்திருக்காங்க. வாங்கிச் சாப்பிடு. அடி மக்குகளா, பிளேட் வச்சு எல்லாருக்கும் எடுத்து வையிடி!”

சாரு தட்டுக்களைக் கொண்டு பரப்புகிறாள்.

கார சமோசா, மலாய் பர்ஃபி.