பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சுழலில் மிதக்கும் தீபங்கள்


“அவ என்ன செய்வா, ரோஜா? அந்தத் தறுதலை, ஏதோ கெடுதலுக்கு வந்து சேர்ந்திருக்கு. கிரி இல்லாட்டா இத்தனை வருஷத்தில, இப்படி, ஒண்ணும் ஆகாரமில்லாத படுத்துக்க விட்டதில்ல. சந்தேகமா இருந்தா, குளிச்சிட்டு வந்து பண்ணிக்குடுப்ப. இப்ப இது என்ன காலத்துக்கு வந்திருக்கோ தெரியலே...கவிதாவும் சாருவும் எட்டிப்பார்க்காதுகள். அதுங்க டிரஸ்ஸும் கண்ராவியும்! குதிராட்டம் வளர்ந்து, கவுனப் போட்டுண்டு கடத்தெருவெல்லாம் சுத்தறதுக. நேத்து, நான் பட்டினி. அவாள்ளாம் கடையில போயி என்னத்தையோ வாங்கி வச்சிண்டு, அதென்ன சிரிப்பு, கத்தல், கும்மாளம்? இப்படி கிரி கிரிசை கெட்டுப் போவான்னு நான் நினைக்கல. இன்னும் என்ன வெல்லாம் பார்த்துண்டு நான் உக்காந்திருக்க்ப் போறேனோ...?”

'த்ஸொ...த்ஸொ...பாவம், நீங்க கண்கலங்கினா எனக்கு மனசே எப்படியோ வேதனை பண்றது! என்னமோ சொல்வா, அந்தக்காலத்திலே, புருஷன் இல்லாத புக்ககக் கொடுமைன்னு’ இது பிள்ளை இல்லாத மாட்டுப் பெண் கொடுமையா? வயசாணவாளப் பட்டினி போட்டுட்டு, எப்படி மனசு வந்தது? நான் கூப்பிட்டுக் கேக்கறேனே...?”

"ஐயோ, வேண்டாம்மா, ரோஜா, அவன் ஊரிலேந்து வந்தா இப்படி இவ்வளவுக்கு இருக்க மாட்டா. அந்தச் சனியன முதல்ல அடிச்சி வெளில துரத்தச் சொல்றேன்...”

இதற்கு மேல் கிரிஜாவினால் பொறுக்க முடியவில்லை.

“என்ன மாமி, நானே வந்துட்டேன். கேளுங்க என்னன்னு?” ரோஜாமாமி, பளிச்சென்று ஒரு சிரிப்பை மலர விடுகிறாள். “ஏம்மா, மாயா வரலியா? நீயே துணி மடிக்கிற?” சுருதியே மாறிவிட்டது. பளிர் குங்குமம், போலிச் சிரிப்பு. சதை சுருங்கிப் பழுத்த முகத்தில் என்ன மேக்கப்? கூந்தல் சாயம், இயற்கைப் புருவங்களை அழித்து பென்சிலால்