பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

31


வளைத்துக் கொண்டு, கிழக்குரங்கு, வேடம் போட்டுக் கொண்டு, போலியாகச் சிரிக்கிறாள். கிரிக்கு எரிச்சல் கிளர்ந் தெழுகிறது. “ஏன், மாயா வரலியா?”

“...நேத்து, பூரியும் பாலும் பண்ணிக் கொண்டு வந்தா வேண்டாம்னு சொல்லிட்டு உங்ககிட்ட இப்ப பட்டினி போட் டான்னு சொல்றார்... நீங்க, நிசம்னு நினைப்பீங்க...”

ரோசமும், துயரமும் துருத்திக் கொண்டு வந்து குரலை நெகிழச் செய்கின்றன, கிரிஜாவுக்கு. அவளைப் போல் வாழைப்பழ ஊசியாகப் பேசத் தெரியவில்லை.

“இதபாரு, கிரி. மனசில எதையும் வச்சுக்காம சொல்லிடறது நல்லது. இவ யாரு இந்த வீட்டு விஷயத்தில் தலையிடன்னு நீ நினைக்கலாம். நீ இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்ன நான் இங்க பெண்ணாய்ப் பழகினவள். உன் மாமனார் என்னை மூத்த பொண்ணுன்னுதான் சொல்வார். ஏன், இந்த டில்லியில், எங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடறப்ப, இவ வீட்டில்தான் கொண்டு விட்டா, அப்புறம்தான் நான் தனிக்குடித்தனமே போனேன். அப்ப ராமகிருஷ்ணபுரமே கட்டியாகல. இந்த இடமெல்லாம் காடு. தை மாசம் எங்கப்பா என்னைக் கூட்டிண்டு வரச்சே, குளிர் நடுக்கிறது.மாமி அன்னிக்கு ஒரு அவியல் வச்சு தேங்காய்பால் பாயசமும் வச்சிருந்தா, பாரு, இன்னிக்கும் நாக்கை விட்டு அந்த ருசி பிரியலே. நவராத்திரி ஒம்பது நாளும் இங்கத்தான் இருப்பேன். இவாளுக்குப் பெரிய குவார்ட்டர்ஸ், கர்ஸான் ரோடில. அவர் ஸ்கூர்ட்டர்ல கொண்டு விட்டுட்டு ராத்திரி வந்து கூட்டிண்டு போவார். அவர் முதமுதல்லே மூணுமாசம் ஜப்பானுக்குப் போனப்ப, நான் இவகூடத்தான் இருந்தேன். சாமு ஸ்கூலுக்குப் போகு முன்ன சாப்பிடமாட்டான், படுத்துவான். ரொட்டியத் தட்டி ஊறுகாயத் தடவி டப்பில வச்சுக்குடுப்பேன்.”

இந்த உறவுத் தொடர்பு சலுகைகளை வெளியே வீசி,