பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சுழலில் மிதக்கும் தீபங்கள்


“வயசு முப்பதாகிறதே! தாலி கழுத்தில் விழலியே” என்று அம்மா மாய்ந்து போனாள்.

“துர்க்கைக்கு ராகுகால அர்ச்சனை பண்றேன். ஆடி மாசம் வெள்ளிக்கிழமையில். நீ வந்து ஒரு வெள்ளியிலானும் எலுமிச்சம் பழ விளக்கேற்றி வை. சுவாமிகளே சொல்லி யிருக்கார், வர தைக்குள் கல்யாணம் ஆகும்னு” என்று கடிதத் துக்கு மேல் கடிதம் அனுப்பினாள்.

அந்தச் சூழலில், அந்தப் பராமரிப்பில், அந்த நம்பிகைப் போஷாக்கில், இவளுக்கு அறிவு பூர்வமான சிந்தனை எப்படி உதிக்கும்?

தலைமை ஆசிரியர், வயது முதிர்ந்தவர். விடுப்புக்கும் தடையில்லை. ஒரு வெள்ளிக்கிழமை, எலுமிச்சம்பழ முடியைத் திருப்பி நெய்யூற்றி, சந்நிதியில் விளக்கேற்றி வைத்தாள்.

தனக்கு வரப்போகும் கணவன், முரடனாக, குடிகாரனாக, குரூபியாக இருக்கலாகாது என்று மட்டும்தான் அவளால் எண்ண முடிந்தது. சம்பாதித்த பணத்தைத் தன் பெயருக்கு வங்கியில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கத் துணிந்திராத அவள், அந்த அரண் களை மீறி எப்படிச் சிந்தித்திருக்க முடியும்?

“பையன் ஸி. ஏ. பண்ணிட்டு அமெரிக்காவில் போய் மானேஜ்மென்ட் டிகிரி வாங்கியிருக்கிறான். இரண்டு பிள்ளை, ஒரு பெண். பெரியவன் கனடாவில் இருக்கிறான். இவன் இரண்டாவது. பெண்ணுக்குக் கல்யாணமாகி, குழந்தைகள் இருக்கின்றன. ஒரே மாமியார், பிக்குப்பிடுங்கல் இல்லை. கையில் காவில் என்று கேட்கவில்லை, போடு வதைப் போட்டு ஸிம்பிள் மாரியேஜ் பண்ணுங்கள் போதும்’ என்று அந்தம்மா சொல்லிட்டா...” என்று வாயெல்லாம் பல்லாக அம்மா மகிழ்ந்து போனாள்.

கல்யாணத்துக்கு முதல் நாளே, மாமியார் இவரை அழைத்து வரச் சொல்லி, தன்னுடைய ஒன்றேகால் காரட்