பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சுழலில் மிதக்கும் தீபங்கள்


கிரிஜா இத்தகைய உலகத்துக்கு ஒரு காலத்தில் பழக்கப் பட்டிருந்தாள். இப்போது மீண்டு வந்திருக்கிறாள். என்றுமே இத்தகைய சூழலுக்கு இவள் அந்நியப்பட மாட்டாள்.

“எத்தனை மணிக்குக் கிளப்புவானோ?”

“கித்னே பஜேகோ பஸ் நிகல் தி ஹை”?

“ஏக் கண்டேகோ...” என்று அடுத்த வரிசைக்காரன் மறு மொழி கொடுக்கிறான்.

ஸாடே பாங்ச்...சே...பஜேகோ...பஹீஞ்ச்தீ!

“ஆறு மணிக்குள்ள போயிடும்மா...?”

“இருட்டறதுக்குள்ள போயிட்டாத் தேவல. எங்கிட்ட ஒரு லெட்டர் வாங்கிக் குடுத்திருக்கிறான் அந்தப் பிள்ளை, பூரீ மடத்துக்குச் சொந்தமான சத்திரத்தில தங்கிக்கலாம்னு. மூணு நாள் சாப்பாடும் போடுவாளாம். நீ எங்கே போறேம்மா வேலையாயிருக்காப்பல..?”

“...ஆ...டீச்சரா வேலை பாக்கிறவதான். இப்ப டெல்லில இருக்கேன். சும்மா ஒரு ஆறுதலா ரெண்டு நாள் ஹரித்து வாரத்தில் தங்கி கங்கையைப் பார்க்கணும்னு தோணித்து, வரேன்...” எங்க தங்குவியோ?...

“...சிநேகிதா இருக்கா. எங்கானும் இல்லாட்ட தரும சாலாவில தங்கணும். அதொண்ணும் கஷ்டமில்ல மாமி!”

வண்டியோட்டியும் நடத்துனரும் வந்து விட்டார்கள்.

இறுக்கங்களைக் கரைத்துக் கொண்டு பஸ் நகரைக் கடந்து செல்கிறது. யமுனைப்பாலம். யமுனையில் தண்ணிர் பெருகி ஒடுகிறது.

'யமுனைத்தாயே! கிருஷ்ண கிருஷ்ணா! ஜலத்தைப் பார்க்கவே பரவசமா இருக்கு. கிருஷ்ணா, கோதாவரி, எல்லாம் ராத்திரில முழிச்சிண்டு பார்த்தேன். நர்மதை