பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

57


வந்ததுன்னா, எனக்கு எதுன்னு தெரியல. கோடிச்சுக் கோடிச்சு, ஆயுசின் கடைசிக் கட்டமா ஊரைவிட்டுக் கிளம்பி வந்துட்டோம். இதுவரையும் எப்படி எப்படியோ சிரமமில்லாம எல்லாம் பார்த்துட்டோம். பத்ரிக்குப் போகணும்னு ஆசைப்படல. அரித்துவாரம் ருஷிகேசம் பார்த்து கங்கையில ஸ்நானம் பண்ணனும்! ரொம்ப இழுக்கும். ஜாக்கிரதையா சங்கிலியப் புடிச்சிண்டு குளிக்கனும்னா. ஸ்வாமிகள் வேற இப்ப அங்க இருக்காளாம்...!”

அந்தம்மாள் வாயோயாமல் பேசுவது இவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.

மீரட்டில் வண்டி நிற்கையில், பையைத் திறந்து ஒரு பிளாஸ்கை எடுக்கிறாள். காப்பியை மேல் மூடியில் ஊற்றி, கனவனிடம் “காப்பி குடிச்சுக்குங்கோ!” என்று கொடுக்கிறாள். அவருக்கு மூடி பிடிக்கக்கூட கை நடுங்குகிறது. இவளே பிடித்துக் கொண்டு குடிக்கச் செய்கிறாள்.

பிறகு உள்ளேயிருக்கும் சிறிய மூடி போன்ற பிளாஸ்டிக் ‘கப்’பில் சிறிது காப்பியை ஊற்றி கிரிஜாவிடம் நீட்டுகிறாள்; “இந்தாம்மா நீயும் ஒருவாய் குடிச்சுக்கோ.”

“நீங்க குடிங்க மாமி! என்கிட்டே பழம் வாங்கி வைச்சிருக்கேன்.”

“இருக்கட்டும். நிறைய இருக்கு-காபி. அத்தனையுமா குடிக்கப் போறேன்? ஆளுக்குக் கொஞ்சம்...டில்லியிலே பால் ரொம்ப நன்னாயிருக்கு...”

கிரிஜா தட்ட முடியாமல் காபியை வாங்கிப் பருகுகிறாள்.

இப்படிப் பரிவுடன் யார் அவளுக்கு காபி ஊற்றிக் கொடுத்திருக்கிறார்சுள்? அந்த இதமே அதன் சுவையாக நாவில் பரிமளிக்கிறது!