பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

63


கெளரியம்மாள், கணவனைக் கையைப்பற்றி அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.

‘நீங்க, மாமா எழுந்து, அவரைக் கூப்பிட்டு வர நேர மாகும்னு நான் வந்துட்டேன். உங்களுக்கு வழி தெரிஞ்சதில்லையா?...’

‘...இங்கியும் இழுப்புத்தானே இருக்கு....?’

இதற்குள் குஜராத்திப் பெண்ணின் உற்சாகம் பஞ்சாபிக் காரிக்குத் தொற்றிவிட, ஆயியே... ஜி...’ என்று கையை நீட்டுகிறாள்.

‘மாமி, இப்படி வாங்கோ, கையைப் புடிச்சிட்டு நாலைஞ்சு பேராக ஸ்நானம் பண்ணுறது ரொம்ப சுகமாயிருக்கு. கங்கைக் கரைக்கு வந்து செப்பில் முகர்ந்து விடுவதா? மாமா? வாங்க! மாமி கையெப் பிடிச்சுக்குங்கோ...’

உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகிறது. இந்த வளையத்தில் இப்போது கிழவரின் மறு கையைப் பற்றிக் கொள்ள ஒர் இளைஞன் வருகிறான், அவன் மனைவி மறுகை. இடையில் இரு தம்பதியரையும் இணைக்கும் கிரிஜா-மூழ்கி மூழ்கி அந்தப் பரவசத்தில் திளைக்கின்றனர்.

கெளரி அம்மாள் ‘கங்கே, யமுனே, சரஸ்வதி, காவேரி, பவானி என்று எல்லா நதிகளையும். சங்கமிக்க வைக்கும்படி சொல்லிச் சொல்லி மூழ்குகிறாள். நீரோட்டம் புதுமையாக வருகிறது; புதிதுபுதிதாக மனிதர்கள் இணைவதும், கரையேறு வதும் புத்துணர்வின் அலைகளாய்ப் பிரவகிக்கின்றன.

கிரிஜா பழைய கிலேசங்கள் சுத்தமாகத் துடைக்கப்பட, தன்னைப் புதிய கன்னியாக உணருகிறாள்.

மூன்று நாட்கள் கங்கை நீராடலும் கரையில் திரிதலுமாக ஒடிப் போகின்றன. விடுதலையின் இன்ப அமைதியைக் சூழந்தைபோல அநுபவிக்கிறாள்.