பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சுழலில் மிதக்கும் தீபங்கள்


போயும் போயும், எந்த ஆடம்பரச் சூழலை வெறுத்தாளோ அங்கேயே வந்து சேருவாளோ?

ஹரிகி பைரியில் இப்போதும் கூட்டம், நீராடும் கலகலப்பு, குழுமிக் கொண்டிருக்கிறது. தூய மஸ்லின் உடையணிந்த ஒரு வங்க மூதாட்டி, வரிசையாக வறியவர்களுக்கு அன்னதானம் செய்கிறாள். அடுக்கான ரொட்டி; அகலமான பித்தளைப் பாத்திரத்தில் மஞ்சளாக ‘தால்’ (பருப்பு) ஒவ்வொருவருக்கும் நான்கு ரொட்டிகளும் இரண்டு கரண்டி பருப்புமாக ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள். வேலையற்று, இந்த கங்கைக் கரையிலும் அழுக்கைச் சுமந்து கொண்டு வேடம் போட்டுப் பிச்சை பெறும் கும்பல்...பிச்சை பெறுவதற்குச் சுத்தமாக இருக்கலாகாது..?

அருவருப்பாக இருக்கிறது. நான் பெரியவள், நான் கொடுப்பவள் என்ற அகங்காரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் வருக்கம் கங்கையின் தூய்மையையும் மாசுபடுத்து கிறதென்று நினைத்துக் கொள்கிறாள். இந்த மக்களே இல்லாத கங்கைக்கரை, ஆதிநாட்களில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முயலுகிறாள்.

‘ருஷிகேச்... ருஷிகேச்...என்று பஸ்காரன் ஒருவன் கூவியழைக்கிறான்.

இங்கு நிற்பதற்குப் பதில் பொழுதைக் கழிக்கச் செல்லலாமே என்று தோன்றுகிறது. நிறுத்தி ஏறிக்கொள்கிறாள்.

சாலையில் செல்கையில் எந்தப்பக்கம் நோக்கினாலும் பசுமை கொள்ளை கொள்கிறது. கங்கை கண்பார்வையை விட்டு மறைந்து போகிறது. ஆனால் அவள் வண்மையில் வஞ்சகமில்லாத பசுமை, சரத்காலமல்லவா? அருவிகள் ஆங்காங்கே சுரந்து வருகின்றன. புல்வெட்டுபவர்கள், கூவி வேலை செய்யும் எளிய பெண்கள், வறுமையை இந்த வண்மையிலும் அகற்ற முடியவில்லையே என ஏக்கத்துடன் ஆங்காங்கு தென்படும் குழந்தைகள். குழந்தைகளால்தான்