பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சுழலில் மிதக்கும் தீபங்கள்


“பாட்டி ரூம்ல எழுந்து உக்காந்திண்டிருக்கா!”

இது எச்சரிக்கைக் குரல். பாட்டியின் அறையில் இருந்து மொட்டை மாடிக்கும், அவளுடைய குளியலறைக்கும் வரலாம். மொட்டை மாடியில்தான் ‘கச்சடா டப்பா’ எனப் பெறும் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. சாப்பாட்டுத் தட்டுக்களில் இருந்து கழிக்கப் பெறும் கறிவேப்பிலை, முருங்கை சக்கை, பழத்தோல் போன்ற எச்சிற் குப்பைகள் இடம்பெறக் கூடிய குப்பைத் தொட்டி, உள்புறம் இடம் பெறக் கூடாது என்பது பாட்டியின் சட்ட திட்டம். கீழ்ப்புறம் விசையுள்ள மூடித்திறக்கக் கூடிய சுகாதாரமான குப்பைத் தொட்டிதான் என்றாலும் அதற்குரிய இடம் வெளிப்புற மூலை. அதை அன்றாடம் துப்புரவு செய்ய வரும் துப்புரவுக்காரியும் வீட்டுக்குள் வரக்கூடாது என்பது பாட்டியின் இன்னொரு சட்டம்.

வந்தனாவை “ஜமேதாரி” (ஜிம்மேதாரி) என்று சொன்னாலே கோபித்துக் கொள்வாள். ‘என் பேரைச் சொல்!” என்று ஆணையிடுவாள். அதுவும் நியாயம். அவள் குப்பை எடுத்துச் செல்பவளாகவா தோற்றமளிக்கிறாள்?

பளிச்சென்ற குங்குமப் பொட்டும், வாரிய கூந்தலும், சிறிதும் அழுக்கு ஒட்டாமல் பூத்துக் குலுங்கும் ஸல்வார் கமீஸுமாக, புத்தம் புதிய மலர் போல் இருக்கிறாள். கால்களிலுள்ள செருப்பைக்கூட வாயிலிலேயே கழற்றி விட்டுத் தான் நீண்ட நடை கடந்து வருகிறாள்.

தன் கைவாளியில் குப்பையைக் கவிழ்த்துவிட்டு, தொட்டியைச் சுத்தம் செய்ய, கிரிஜா தண்ணி கொண்டு வந்து ஊற்றுகிறாள். துப்புரவாக வடித்து, அடியில் ஒரு காகிதமும் போட்டுவிட்டு, துடைப்பமும் வாளியுமா வந்தனா போகிறாள்.

மணி ஆறரை அடித்தாயிற்று. பெரிய பெண் கவிதா இன்னமும் எழுந்திருக்கவில்லை. பத்தாம் வகுப்பு!