பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சுழலில் மிதக்கும் தீபங்கள்


எடுத்துக் கொள்’ என்று வருகிறது.

‘ஏம்மா? இவயாரோ, எதுக்குப் போகணும்னு பார்க்கறியா? தயங்க வேண்டாம், வா... நானொன்னும் ‘பஞ்சபட்ச பரமான்னம்’ வச்சிருக்கல. ஒரு மோரும் சோறும் ஊறுகாயும் தான்...’

‘...நீங்க சாப்பிட்டாச்சா...?’

‘நான். ஆயிட்டுது. உள்ள வா...’

கிரிஜா வாயிற்படியில் கிழவி தரும் செம்பு நீரால் கால்கை கழுவிக் கொள்கிறாள். நீள் சதுர ஒற்றைக்குடில். மூலையில் அவள் பார்த்தறியா மண் அடுப்பு சிறு அலுமினியம் வட்டையில் உள்ள சோற்றை ஒரு தட்டில் போட்டு குடுவை ஒன்றிலிருந்து கெட்டியான மோரை ஊற்றுகிறாள். உப்பும் எலுமிச்சை ஊறுகாயும், அந்த உணவை அவளுக்கு இது காறும் அநுபவித்தறியா சுவையுள்ளதாகச் செய்கின்றன.

திருமணமானபின் இத்தனை ஆண்டுகளில் பிரசவித் திருந்த நாட்களில் தாயும், மாமியாரும் சாப்பாடு போட்டிருக்கிறார்கள், ஆனால் அதுகூட இத்தகைய பரிவாய் சுவைத்ததில்லை.

‘பாட்டி, நான் இவ்வளவு ருசியுள்ள சாப்பாடு சாப்பிட்ட தேயில்லை. இது என் நாற்பத்தாறு வயசின் சொல்ல முடியாத நிறைவு தரும் அநுபவம்...’

‘...சில நாளில் இப்படித்தான் யாருக்கேனும் சாப்பாடு போடணும்னு தோணும். தோணினால் கூப்பிடுவேன். இன்னிக்கு என்னமோ, இந்தப் படியில் உட்கார்ந்திருந்தேன், நீ மேலே ஏறி வந்தது தெரிஞ்சது. சந்தோஷமாயிருந்தது...’

‘பாட்டி, நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க, நான் படிச்சுப் பட்டம் வாங்கி, எட்டு, பத்து வருஷம் போல டீச்சர் உத்தியோகம் பண்ணினேன். கல்யாணம் பண்ணிட்டு பதினேழு வருஷமாச்சு டில்லியில்தான் இருக்கிறேன்...