பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

85


"ஏன் போகாம? கன்யாகுமரி வரையிலும் நடந்தே யாத்திரை போயிருக்கிறோம், ஆனா ஒண்னு சொல்றேன்: எனக்கு இங்கே கிடைக்கும் நிம்மதி எங்கும் இல்லை. இங்கயும் எங்க காலம், அந்த யுகம் போயிட்டுது. இப்ப சாமிஜி பேரில மிஷன்னு பெரிய அமைப்பா வச்சு நடத்தறா மேல பாரு பெரிய கட்டிடம், பிரார்த்தனை மண்டபம் எல்லாம் இருக்கு, இவா மிஷன் ஆஸ்பத்திரி கூட உள்ள டவுன்ல கட்டியிருக்கா. பெரிய பெரிய பணக்காரா, அக்கரையில் குடீர் கட்டி வச்சிருக்கா, அவாளுக்கு அப்பப்ப வந்து தங்க...எல்லாம் மாறிப்போயிட்டது. ஆனா...இப்பத்து நடைமுறைக்கும். அப்போதைய லட்சியத்துக்கும் சம்பந்தமே இல்லைம்மா...!’

கிரிஜா கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். ‘தனது பிரச்னையைப் பற்றி இந்த மூதாட்டியிடம் சொன்னால்...’

‘பாட்டி, படிச்சுப் பட்டம் வாங்கின எங்களை எல்லாம் விட நீங்கள் அறிவாளியாகப் பேசுகிறீர்கள்... நீங்க உங்களுக்கு இந்த அமைதிக்கரையில் கூட மனிதர் வந்து குலைச்சிட்டுப் போறதை நேராகப் பார்க்கிறீர்கள். இப்பத்து வீடுகள்: குடும்பங்கள் எப்படியிருக்குமோன்னு நினைச்சுப் பார்க்கறேளா?’

‘நினைச்சுப் பார்க்கிறதென்ன? லோகமே பணத்துல இருக்கு. அதனால, பெண்ணாகப் பிறந்தவள் அதிகம் கஷ்டப் படுகிறாள். இவளுக்குப் பணமும் சம்பாதிக்கணும்னு கடமை வந்து சுமக்கிறாள். இல்லாட்டா, அத்தனையும் சதையாக மாப்பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிண்டு காரில போறா. இங்க ‘குடீரு’க்கு வர பணக்காராளைப் பார்ப்பேன். அப்பதோணும். ஏண்டி, பிறந்த வீட்டிலேந்து அது கொண்டு வரல. இது கொண்டு வரலேன்னு அடிச்சுத் துரத்தும் கொடுமை இன்னும் இருக்கு. கங்கையில் விழுந்து சாகிறதும் கூடத்தான் இத்தனை வருஷத்தில பார்க்காமலில்லை...’சு-6