பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"என்ன விலை சொன்னாலும் வாங்க, நீங்கள் இருக்கவே தான், அவனவன் விலையை, இஷ்டபடி தூக்கிக்கொண்டே போகிறான்” என்று நான் கோபமாகக் கூறினேன். என் மனைவி சிரித்துவிட்டு, “வாங்காமல் என்ன செய்வது! அந்தப் பாவிகள் விலையை ஏற்றிவிட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வது" என்று சமாதானம் கூறினாள். ஆமாம், பாவம், தனம் (என் மனைவி) என்ன செய்வாள்.

அன்றிரவு என் கோபத்தை அவள் குளிர்ந்த மொழி பேசி உபசரித்துத் தணிவித்தாள்.

"ஒரு அநியாயம் தெரியுங்களா! கோடி வீட்டிலே குப்புசாமி தெரியுமேல்லோ, தறி நெய்யலே அந்த அண்ணன், அவருக்குச் செக்கச் செவேலுன்னு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்பவே அரை டசன். என்ன செய்வாரு பாபம். அதை ஆறணாவுக்கு, அடுத்த தெரு அகிலாண்டத்துக்கு விற்று விட்டாங்க. அகிலாண்டத்துக்குப் புள்ளே குட்டி கிடையாது. அவ, என் கண்ணே, பொன்னே என்று கொஞ்சிக் குழந்தையை ஆசையாத்தான் வைச்சிருக்கா!" என்றாள் என் மனைவி.

"பெற்ற குழந்தையை விற்றார்களா! என்ன பரிதாபம்"

"பாவந்தான், அவளுக்கு மனசே இல்லை. குழந்தையைப் பார்த்துப் பார்த்து அழுதாள். என்ன செய்வாள். தரித்திரம் பிடிங்கித் தின்கிறது. ஒரு நாளைக்கெல்லாம் அவ புருஷன் வேலை செய்தா, பத்தணா கிடைக்குமாம். கூழுக்குக்கூட அது, இப்போதுள்ள விலைவாசியிலே போதாது. குழந்தைக்கு ஒரு மாந்தம், ஜுரம் வந்தா, வைத்தியத்துக்கூடக் காசு கிடையாது. முன்னே துணி நெய்தா, உடனே கடையிலே விற்றுவிடுமாம். இப்போ வேண்டாம், வேண்டாம், என்று கடைக்காரன் சொல்லி

22