பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெற்று, பெருமூச்சுடன் கிடக்கவேண்டும். காலையிலே, அந்தக் கடின சித்தம் படைத்தோன். அடே கழுதே! என்று ஏசினானே, அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக்கூடியதாகத் தோன்றும். அர்த்த ராத்திரியிலே அவள், "ஆமாம்! நான் கேட்டால் வாங்கித் தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?" என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் கோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்கமுடியாத தொல்லையாக இருக்கும்.

அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்ட பலன் என்ன? நான் ஒரு ஏழை! பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்துகொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்........."

பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை இருந்தபோது இதுபோலக் கூறிவந்தான். ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்துவிடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது! ஆஸ்ரமத்தை மாற்றிவிடவேண்டிய அவசியமும் பிறந்தது. "என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடிபோடுவதைப் பார்க்கவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோதுகூட அவர்கள் மனச்சாந்தியில்லாமலே இறக்கவேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் என் மனக்குறை ஏற்படும்படி நடந்துகொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்துவிட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒரு கட்டை. என்னமோ அவளைத் தொட்டுத் தாலி கட்டுகிற

27