பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீடுன்னு இருந்தா அதிலே நமக்குன்னு ஒரு சம்சாரம் உலாவுனாத்தான் களையா இருக்கு. ஒண்டிக்கட்டையாக எத்தனை காலந்தான் இருந்தோம், என்ன பலன்! நாயகி நம்மைப் பார்த்து, வெந்நீர் வேணுங்களா? என்று கேட்டவுடனே, காலையெல்லாம் பட்ட கஷ்டமத்தனையும் காற்றுப் பறந்து போயிடுது. என்னமோ அழைக்கிறோம், பெரிய நாயகி அன்போடு சாப்பாடு போட்டு, காலையிலே செய்த கறியிலே நமக்குன்னு கொஞ்சம் எடுத்துவைத்திருந்து இரவிலே போடுவதும், இன்னும் கொஞ்சம், ஒரே ஒரு பிடி, என்று உபசரிப்பதும், என்னாங்க! எவ்வளவு பாடு உங்களுக்கு? வயிறாரச் சாப்பிடவேண்டாமா? எல்லாம் உடலிலே பலம் இருந்தாத்தானே என்று கனிவாகப் பேசும்போதும், வர வரத் துரும்பாக இளைத்துப் போறிங்க என்று வைத்தியராகும்போதும், தலைவலிக்குத் தைலம் தடவும்போதும், அடடா! அது ஒரு தனி இன்பமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு, எவ்வளவு கஷ்டந்தான் இருக்கட்டும், வீட்டிலே ஒரு மனைவி இருந்தாலே, அது ஒரு சந்தோஷம் தானே!—என்று மதுரை எண்ணிக் களித்தான். பெரிய நாயகி, தாயானதும், அவனுடைய சந்தோஷம் அதிகரித்தது. இரண்டு குழந்தைகளானபோதும் சந்தோஷமாகத் தான் இருந்தது. "அவன் எங்கே? சின்னவனை ஜாக்ரதையாகக் கவனி! ஜலதோஷம்போல இருக்கே" என்று சொல்லுவான் மதுரை, பூரிப்பு தழுவிய பொறுப்புடன். நாலு குழந்தைகளாகிவிட்டன. சந்தோஷம் சஞ்சலத்தைப் பெற்றுவிட்டது.

"அடடா! காச்சுமூச்சுன்னு, ஏன் இதுகள் இப்படிக் காக்காயாக் கத்துதுங்க?"

"குழந்தைகள் இருந்தா அழாமே இருக்குமா?"

31