திட்டித் துரத்துகிறார்களே தவிர, ஐயோ பாவம் என்று சொல்லி மனமிரங்கி, தர்மம் செய்யணுமேன்னு ஒருவருக்கும் எண்ணம் வரவில்லையே. அட ஈஸ்வரா! ஈஸ்வரா! இவனுங்க கிட்ட ஏண்டாப்பா, இவ்வளவு சம்பத்து கொடுத்து எங்களை இப்படி ஓட்டாண்டியாக்கி, சாவடியிலே சாகவைக்கிறே. உனக்குக் கண்ணில்லையா?"
மகாநாட்டுத் தலைவர் ஓர் மார்வலிக்காரன்; "ஆமாண்டா, ஈஸ்வரனுக்குக் கண் இருந்தா, என்னை ஏண்டா இந்தக் கதியிலே விடுகிறார். பஞ்சையா இருந்தாலும், இப்போது கூட நான், பூபறித்து மாலை கட்டி, ஆலமரத்துப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து சூட்டி, தோப்புக்கரணம் போட்டுத் துதித்துக்கொண்டுதானே இருக்கிறேன்; என் சக்திக்கேற்ற பக்கி செய்கிறேன்; வாரிக் கொடுத்துவிட்டதா சாமி. போடா! சாமிகூட, சீமானாக இருந்தாத்தான், சிரிச்சு விளையாடிப் பேசும். நாம் கூப்பிட்டா அதன் காதிலே ஏறவா போவுது? அதுக்குக் கண்ணுமில்லை, பேச வாயும் இல்லை" என்று வெளுத்து வாங்கினான். காலையிலே சீமானிடம் 'சீப்பட்ட' பஞ்சை, "நாம், கேவலம் மனிதர்களைப் பார்த்து, கைகூப்பித் தொழுது, சாமி, புண்யவானே, என்று துதித்துப் பயன் இல்லை. பகவானைத் துதித்தால், பலனுண்டு அவன் பெயரைப் பஜிக்கவேண்டும். அவன் நாமத்தைப் பாட வேண்டும். அவன் கண் திறந்து பார்த்தால் நமது கஷ்டம் ஒருவிநாடியிலே காற்றாய்ப் பறக்காதா?" என்று முடிவுரை கூறினான். ஜே! சீதாராம்! என்று கூவிக் கஞ்சாப் புகையைக் கெம்பீரமாக வெளியே அனுப்பிவிட்டு, வடநாட்டுச் சாதுபோல் வேடம் போட்டுக்கொண்டு தன் பிச்சைக்காரத் தொழிலை நடத்தி வந்தவன் வந்தனங் கூறிய பின், மாநாடு கலைந்தது; அவர்கள் உறங்கலாயினர்.
✽✽✽
37