பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். எம். கமால்

17

மானாமதுரை போன்ற இடங்களைத் தங்களது தலைமையிடங்களாகச் சொந்தத் தன்னரசுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்,[1] அவர்களைப் போல சோழர்களின் தானைத் தலைவர்களாக இருந்த செம்பிநாட்டு மறவர்கள், அப்பொழுது அவர்களது பொறுப்பில் இருந்த பகுதிக்குத் தங்களை அதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். அவர்களது நாடு பின்னர் சேதுநாடு என்று வழங்கப்பட்டது.

ஆனால் சேதுபதி மன்னர்களது தொன்மையைப் பற்றிக் கூறும்போது இலங்கை சென்று திரும்பிய இராமபிரான் அவர் அமைத்த திருவணையாகிய சேது அணையைக் காத்து வர அவரால் நியமிக்கப்பட்ட மக்கள் தலைவரது வழியினர் என்று சொல்லப்படுகிறது.

சேது + பதி --- சேதுபதி

சேனை + அதிபதி --- சேனாதிபதி

மடம் + அதிபதி --- மடாதிபதி

என்ற வழக்கிற்கேற்ப இம்மன்னர்களின் குலப்பெயரும் சேதுபதி என ஏற்பட்டிருத்தல் வேண்டும். "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்" என்ற ஆழ்வார்களது ஐதீகத்தையொட்டி "சேதுபதி தரிசனமே இராமலிங்க தரிசனம் எனச் செப்பலாமே" என்ற வழக்கும் இருந்து வந்துள்ளது. -

இவர்களது தொன்மை எப்படி இருந்த போதிலும், இவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றுகளின்படி இந்த மன்னர்கள் சிறந்த ஆட்சியாளராகவும், ஆன்மீகத்தையும், தாய்மொழியாகிய தமிழையும், போற்றி வந்துள்ளனர் என்ற உண்மை புலப்படுகிறது.

கி.பி. 1414இல் இராமேஸ்வரம் திருக்கோயில் திருச்சுற்றையும் மேலக் கோபுரத்தையும் உடையான் சேதுபதி என்பவர் அமைத்தார் என்ற கல்வெட்டுச் செய்திதான் சேதுபதி மன்னரைப் பற்றிய மிகப் பழமையான கல்வெட்டுச் செய்தியாக கொள்ளப்படுகிறது. வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் பர்கூசன் குறிப்பிட்டுள்ள இராமேஸ்வரம் கல்வெட்டுக்களின் படி, சேதுபதி மன்னர்கள் கி.பி. 1487, 1500, 1524 ஆகிய ஆண்டுகளில் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு அறக்கொடைகள் வழங்கியுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார்.[2]

கி.பி. 1547இல் இராமேஸ்வரம் பகுதியில் உள்ள வேதாளை கிராமத்தில் போர்ச்சுகல் நாட்டு வீரர்களுக்கும், மதுரை நாயக்கர், சேதுபதி


  1. தனிப்பாடல் திரட்டு
  2. Jamesfargoosan - The history of India and the great eastern architecture. (1876) சே. - 2