பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சேதுபதி மன்னர் வரலாறு

வீரர்களுக்கும் இடையில் நடந்த போர் நிகழ்ச்சியின்படி சேதுபதி மன்னர்களின் ஆட்சி இந்தப் பகுதியில் 16ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து வந்துள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது. துத்துக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு மன்னார் வளைகுடாப் பகுதியைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்த போர்த்துக்கீசியரின் ஒரு அணியினர் வேதாளை கிராமத்தில் ஒரு சிறிய கோட்டையை அமைத்துக்கொண்டு இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு மிகுந்த இடைஞ்சல் ஏற்படுத்தி வந்தனர்.

அப்பொழுது இருந்த சேதுபதி மன்னர் இந்த ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கான வலிமையற்றிருந்தால் மதுரை மன்னரை அணுகி படைபலம் பெற்றுப் போர்த்துக் கீசியப் பரங்கிகளைத் துரத்தியடித்தார் என்ற செய்தி சேதுபதிகளின் ஆட்சியினை உறுதிப்படுத்துகிறது.[1] மற்றுமோர் வரலாற்றுச் செய்தி, கி.பி. 1530 முதல் மதுரை நாயக்க மன்னராய் இருந்த விசுவநாத நாயக்கர் மதுரையில் தொன்றுதொட்டு ஆட்சியாளராக இருந்த பாண்டியர்களை அழித்து அவர்களை வலுவிழக்கச் செய்து, கயத்தாறு, தென்காசி ஆகிய இடங்களில் பெயரளவில் மன்னராய் இருக்கச் செய்தது போல, மறவர் சீமையின் ஆட்சியாளரான விரையாத கண்டனிலிருந்த ஜெயதுங்க தேவரையும் ஆட்சியிலிருந்து அகற்றியதுடன் அவரைக் கொன்றும் விட்டார். [2]

இதனால் நிலைகுலைந்த மறவர்களது அரசின் நிர்வாகிகளும் அரச குடும்பத்தினரும் கிழக்கே தற்பொழுது போகலூர் என்றழைக்கப்படும் புகலூரில் அடைக்கலம் பெற்றனர். புகலூர் என்ற பெயரே இந்த அரச குடும்பத்தினர் அடைக்கலம் பெற்றதைக் குறிப்பிடுவதாக அமைந்தது. இவர்களது. வாரிசான சடைக்கத் தேவன் என்ற இளைஞன் மட்டும் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் தஞ்சம் அடைந்தான். மறவர் சீமையில் இயல்பு நிலை ஏற்பட்ட பொழுது கி.பி. 1600ல் இளைஞன் சடைக்கன் போகலூரில் சேது மன்னர்களது முதலாவது அரசினை நிறுவினான்.

இதனை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இளைஞன் சடைக்கன், சடைக்கன் சேதுபதி என்ற பட்டத்துடன் அரசு நிர்வாகத்தை ஏற்ற பிறகு தம்மை இலங்கையிலிருந்து தேடிப் பிடித்துப் போகலூர்க்கு அழைத்து வந்தவர் கீழ்க்கரை நகர மரீச்சி ஆசாரி என்பவரைப் பாராட்டிச் சிறப்புச் செய்தது தான் அந்தச் செய்தி[3]ஆகும்.


  1. Rev. fr. Heras – The aravedu dynasty.
  2. Satyanatha Ayyar. The history of Madura nayakas.
  3. Entries in the inam Register available in the Ramanathapuram collector's office