பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சேதுபதி மன்னர் வரலாறு

இராமனுக்கு ஈஸ்வரனாகிய சிவனை, இராமநாதசாமியை வழிபடும் பக்தன் என்ற முறையில் இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனைப் போன்றே இந்த மன்னர் இராமனது அடியார் (அ) இராமபிரானால் நியமனம் பெற்றவர் என்ற வகையில் இராமபிரானது சூரிய வம்சத்தினர் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரகுநாத என்ற சிறப்புப்பெயர் இவரின் இயற்பெயருடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் இன்றைய இராமநாதபுரம் நகருக்கு மேற்கே எட்டுக்கல் தொலைவில் உள்ள போகலூர் தலைமையிடமாக இருந்தது. ஆனால் இந்த ஆட்சியின் பரப்பைக் குறிப்பிடும் ஆவணங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. பொதுவாக கோடிநாடு என்று வழங்கப்பெற்ற இராமேஸ்வரம் தீவுப்பகுதியும் அதனையடுத்து மேற்கே உள்ள கீழ்ச்செம்பிநாடு என்ற பகுதியும் இதற்கும் மேற்கேயுள்ள செவ்விருக்கைநாடு, தாழையூர் நாடு, முத்துர் நாடு, கைக்கிநாடு ஆகிய பகுதிகளைக் கொண்ட அரசின் தலைவராக இந்த மன்னர் இருந்திருக்க வேண்டும்.

இதுபோலவே இந்த மன்னனது தலைநகரான போகலூர் எப்பொழுது கோநகராக மாற்றப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால் இந்த மன்னரது சமகாலத்தவரான மதுரைப் பேரரசர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரது இராஜகுரு இராமேஸ்வரம் யாத்திரை சென்றபோது "புகழுரிலிருந்த சடைக்கத் தேவர் இராஜகுருவைப் பின்தொடர்ந்து இராமேஸ்வரம் யாத்திரைக்கு உதவி செய்தார்' என்று ஒரு ஆவணத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதால் போகலூர் தலைநகர் என்பது உறுதியாகின்றது.[1]

ஆனால் இந்த மன்னர் கி.பி. 1607 முதல் வழங்கியுள்ள செப்பேடுகளில் "துகவூர் கூற்றத்து குலோத்துங்க சோழன் நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும்” என்ற தொடர் காணப்படுவதால் இவரது (அ) இவரது மூதாதையரது பூர்வீக இடம் விரையாத கண்டன் என்பது உறுதிப்படுகிறது.

மதுரை மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரோடு ஏற்பட்ட தொடர்பு காரணமாக இந்த மன்னரை மதுரை நாயக்க மன்னர்களது தளவாய்களில் ஒருவராக நியமனம் பெற்றதுடன் அதற்கான சிறப்புப் பரிசில்களையும் சேதுபதி மன்னருக்குப் பெற்றுத் தந்தது. இத்தகைய சிறப்பினைச் சேது மன்னருக்கு மதுரை மன்னர் வழங்கியதற்கு ஒரு பின்னணியும் இருந்தது. தென்பாண்டிநாடு முழுவதும் மதுரை நாயக்க மன்னருக்குக் கட்டுப்பட்ட பகுதியாக இருந்தாலும் தூத்துக்குடி கடற்கரையிலுள்ள பரவர்களும்,


  1. J. W. Taylor- Old historical manuscripts- Vol- II (1881)