பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சேதுபதி மன்னர் வரலாறு

அறக்கொடைகள்:

இந்த மன்னர் வழங்கிய செப்பேடுகளில் மூன்று மட்டும் கிடைத்துள்ளன. இவைகளிலிருந்து இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் அதன் காரணமாகக் கோயிலில் பூஜை, நைவேத்தியம், அபிஷேகம் மற்றும் சிறப்புக் கட்டளைகளுக்காக மன்னர் ஆறு கிராமங்களை வழங்கி உள்ளார் என்பதும் தெரிகிறது. மேலும் இந்தக் கோயிலில் பணியாளர்களாகப் பணியாற்றி வந்த பஞ்ச தேச ஆரியப் பெருமக்களுக்கு (பஞ்ச தேசத்து ஆரியர் - மகாராஷ்டிரம், கொங்கணம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம்) வீடுகள் அமைத்துக் கொள்வதற்காக இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரைக்கும் திருக்கோயிலின் நுழைவுவாயிலுக்கும் இடைப்பட்ட பரந்த வெண்ணிலத்தை நிலக்கொடையாக வழங்கியுள்ளார் என்பதும் தெரியவருகிறது.

இந்தக் கோயிலின் ஆறுவேளை வழிபாடுகளையும், ஆண்டு விழாக்களையும், சிறப்புக் கட்டளைகளையும் செவ்வனே நடத்தப் படுவதைக் கண்காணிப்பதற்கு இந்த மன்னர், இந்த பணிக்கெனத் தனியாக ஆதினக்கர்த்தர் என்ற பணிப்பதவியை ஏற்படுத்தியதுடன் அவருக்கு என திருக்கோயிலை ஒட்டிய வளாகத்தில் மடம் ஒன்றினையும் நிறுவினார். (பெரும்பாலும், இந்த மடம் தற்போதைய திருக்கோயிலைச் சேர்ந்த இராமமந்திரம், திருப்பணி மாளிகை, இவைகளை ஒட்டிய பயணியர் விடுதிகளைக் கொண்ட பகுதியில் அமைந்திருத்தல் வேண்டும் என நம்பப்படுகிறது.) இந்த மடம் பிச்சர்மடம் என வழங்கப்பட்டதுடன், இந்த மடத்தில் வாழ்ந்த ஆதினகர்த்தர் சேது இராமநாத பண்டாரம் எனவும் அழைக்கப்பட்டார்.

தஞ்சைத் தரணியில் உள்ள திருமறைக்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்த வைதிக வேளாண் குடிமக்களைச் சேர்ந்தவரும் சைவச் சாத்திரங்களில் நன்கு பயிற்சி பெற்றவருமான துறவி ஒருவர் சேது இராமநாத பண்டாரம் பதவிக்கு நியமனம் செய்யப்பெற்றார். இந்த அரிய செயல் இந்த மன்னரது இராமேஸ்வரம் திருக்கோவிலைப் பற்றி நன்கு சிந்தித்துச் செயல்பட்ட தொலைநோக்கினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் சோழ மண்டலத்தில் சோழர்களது ஆட்சியில் சோழப் பேரரசர்கள் நூற்றுக்கணக்கான திருக்கோயில்களை அமைத்தார்கள் என்பது வரலாறு. பிற்காலங்களில் இக்கோயில்களில் வழிபாடுகள் முறையாக நடப்பதற்காகத் தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய திருமடங்களின் தலைவர்களாகிய மடாதிபதி