பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சேதுபதி மன்னர் வரலாறு

(...."நம்முடைய கட்டளைக்கு நமது சொந்தத் திரவியம் கொண்டு அபிஷேக, நைவேத்தியம், உச்சபம், நடப்பித்து, அந்தப்பலன் நம்மை வந்து சேருகிறதேயல்லாமல், பிறத்தியாருடைய திரவியம் பாவத் திரவியமாக இருக்கும் ஆனபடியினாலே, நம்முடைய கட்டளையிலே அவைகளை வாங்கி நடப்பிக்கத் தேவையில்லை')

அறக்கொடைகள்

இந்தக் கோயிலின் ஆண்டுவிழாக்கள் அன்றாட பூஜைகள் ஆகியவற்றை நடப்பித்து வருவதற்காக இந்த மன்னர் கமுதி வட்டத்தில் உள்ள மருதங்க நல்லூர் என்ற கிராமத்தையும் பரமக்குடி வட்டத்திலுள்ள சேதுகால் என்ற ஊரினையும் கோவிலுக்காகச் சர்வமானியமாக வழங்கியிருப்பதை அவரது இரு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த மன்னர் கி.பி. 1624ல் வழங்கப்பட்ட செப்பேட்டின்படி மன்னார் வளைகுடாவில் முத்துச் சலாப காலங்களில் இரண்டு படகுகள் வைத்து முத்துக் குளிக்கும் மன்னரது உரிமையினை இந்தக் கோவிலுக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதனைப் போன்றே அப்பொழுது மக்களால் மிகுந்த மரியாதையுடன் மதிக்கப்பெற்ற திருவாடானை திருக்கோயிலுக்கும் அந்த வட்டத்தில் உள்ள கீரணி, சேந்தணி, கீரமங்கலம் ஆகிய மூன்று ஊர்களையும் தானம் வழங்கியிருப்பதை இன்னொரு ஆவணம் தெரிவிக்கின்றது.

மேலும் இந்த மன்னரது தெய்வீகத் திருப்பணியின் பட்டியலில் போகலூரில் பகழிக்கூத்த ஐயனார் கோயில் அமைப்பும், இராமநாதபுரம் கோட்டையின் மேற்குச் சுவற்றினை அடுத்து நிர்மாணித்த கூரிச்சாத்த ஐயனார் கோயில் அமைப்பும் இடம் பெற்றுள்ளன.

சேதுபதிச் சீமையில் இந்த மன்னருக்கு முன்னால் கிராமப்புறக் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஐய்யனாருக்கு வழிபாடும் விழாவும் நடந்ததாகச் செய்திகள் இல்லை. ஆனால் எத்தகைய சூழ்நிலையில் ஐய்யனார் வழிபாடு இந்த மன்னரால் தொடங்கப்பெற்றது என்பது தெரியவில்லை. இவரை அடுத்து வந்த மன்னர்களது ஆட்சியில் சிவவழிபாடு, வைணவ வழிபாடு, அம்பாள் வழிபாடு ஆகிய வெவ்வேறு வழிபாடுகளுடன் குறிப்பாகக் கிராமங்களில் ஐய்யனார் வழிபாடு பரவலாக நடைபெற்றதைப் பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மற்ற பகுதிகளை விட சேதுநாட்டின் வடக்குப் பகுதியில் இராஜசிங்க மங்கலம் வட்டகையில் ஐய்யனாருக்கு மிகுதியான ஆலயங்கள் அமைக்கப்பட்டு இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.