பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். எம். கமால்

27

இத்தகைய ஆன்மீகப் பணியிலும் சமுதாயப் பணியிலும் வரலாற்றில் தமக்கு எனச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள இந்த மன்னர் கி.பி. 1635ல் இயற்கை எய்தினார்.

இந்த மன்னரது ஆட்சியில் நிகழ்ந்த சுவையான செய்தி ஒன்று. இந்த மன்னர் ஒருமுறை இராமேஸ்வரம் திருக்கோயிலினைச் சுற்றிப் பட்டத்து யானையில் அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது முதியவர் ஒருவர் அதற்கு முன்னர் மன்னரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாததால் மன்னர் அமர்ந்திருந்த யானையின் அருகே சென்று அதன் வாலைப் பிடித்து யானை மேலும் நடந்து செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார். உடன் வந்த வீரர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரை விசாரித்த பொழுது தமது அன்றாட உணவிற்கு வழியில்லை என்ற விண்ணப்பத்தைத் தெரிவிக்கவே அவ்விதம் செய்ததாகச் சொன்னார். இதனை அறிந்த மன்னர் அந்த முதியவரது வல்லமையை அறிந்து மகிழ்ந்து அவருக்கு நாள்தோறும் இருவேளை உணவைக் கோயிலிலிருந்து வழங்குமாறு ஆணையிட்டார். இந்தச் செப்பேடு அரசு சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த முதியவரது பெயர் முத்து விஜயன் சேர்வை என்பதாகும்.

நிர்வாகச் சீரமைப்பு

இந்த மன்னரது சாதனைகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இன்னொரு சாதனையும் உள்ளது. அதாவது இராமேஸ்வரம் திருக்கோயிலில் நாற்புறமும் கடலால் சூழ்ந்த தீவுப் பகுதியாக அமைந்து இருப்பதால் அங்கு நடைபெறும் சமுதாயக் குற்றங்களை உடனுக்குடன் விசாரித்துத் தக்க தண்டனைகள் வழங்குவது சேதுபதி மன்னருக்கு இயலாத காரியமாக இருந்தது. ஆதலால் ஸ்ரீ இராமநாத சுவாமிக்குச் சேதுபதி மன்னர் அறக்கொடையாக வழங்கியுள்ள இராமேசுவரம் தீவுக் கிராமங்களில் உள்ள மணியக்காரர். கணக்கப்பிள்ளைமார், குடியானவர்கள், இராமேசுவரம் திருக்கோயில் பணியில் உள்ள பணியாளர்கள், பரிசுபட்டர், கோயில் தோப்புக்காரர். நந்தவனக்காரர்களை அவரவர் செய்த குற்றங்களுக்கு மறவர் சீமை மன்னர் என்ற முறையில் அவர்களை விசாரித்து ஆக்கினை செய்வதற்கு மன்னருக்குச் சகல அதிகாரங்கள் இருந்தாலும் அவைகளைத் தமது பிரதிநிதியாக இருந்து செயல்படுவதற்கு இராமநாத பண்டாரத்திற்கு அந்த அதிகாரங்களை மன்னர் வழங்கினார். அத்துடன் புனித பூமியான இராமேஸ்வரம் தீவில் குற்றங்கள் பெருகாமல் அவைகளை ஒடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும் இறையுணர்வுடனும் இராமநாத பண்டாரம், குற்றங்களைக் களைந்து