பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சேதுபதி மன்னர் வரலாறு

நியாயம் வழங்குவதில் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபுறமும் சாராமல் மேன்மையுடன் நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையிலும், சேதுபதி மன்னர் ஆதினக்கர்த்தருக்கு இந்த அதிகார மாற்றத்தை அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர் எதுவாக இருந்த போதிலும் இந்த செப்பேடு தமிழகக் குற்றவியல் வரலாற்றின் சிறப்பு ஏடாக என்றும் விளங்கும் என்பதே இயல்பு.[1]

III தளவாய் சேதுபதி (எ)
இரண்டாம் சடைக்கன் சேதுபதி
(கி.பி. 1635 - 1645)

காலம் சென்ற கூத்தன் சேதுபதி மன்னருக்குத் தம்பித் தேவர் என்ற மகன் இருந்து வந்தார். ஆனால் இராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த முதியவர்கள் தம்பித் தேவரது உரிமையைப் புறக்கணித்து விட்டுக் கூத்தன் சேதுபதியின் இளைய சகோதரரான சடைக்கத் தேவரை இரண்டாவது சடைக்கன் சேதுபதியாக அங்கீகரித்துச் சேதுபதி பட்டத்தினை அவருக்குச் சூட்டினர். இராமநாதபுர அரண்மனை வழக்கப்படி சேதுபதி மன்னருக்கு அவரது செம்பி நாட்டு மறவர் குலப் பெண்மணியின் மூலமாகப் பிறந்த மகனுக்கே சேதுபதி பட்டம் உரியதாக இருந்தது. கூத்தன் சேதுபதியின் இரண்டாவது மனைவியும் செம்பிநாட்டு மறப்பெண்மணியும் அல்லாத மனைவிக்கு பிறந்தவர் தம்பித்தேவர் என்பதால் அவர் சேதுபதி பட்டத்திற்கான தகுதியை இழந்தவராகக் கருதப்பட்டார். இரண்டாவது சடைக்கன் சேதுபதி கி.பி. 1635 முதல் கி.பி. 1645 வரை 10 ஆண்டுகள் சேதுபதி மன்னராக இருந்து வந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய இழப்பும், அழிமானமும் சேதுநாட்டிற்கு ஏற்பட்டன.

தமது பேரரசிற்கு அண்மையிலுள்ள மறவர் சீமையின் வலிமை நாளுக்குநாள் பெருகி வருவதை விரும்பாத மதுரை மன்னரான திருமலை நாயக்கர், சேதுநாட்டின் மீது மிகப்பெரிய படையெடுப்பினை, அதுவரை சேதுநாடு கண்டறியாத மிகப்பெரிய போர் அணிகளைச் சேதுநாட்டிற்குள் கி.பி. 1639ல் அனுப்பி வைத்தார். வடக்கே கொங்கு நாட்டிலிருந்து தெற்கே நாஞ்சில் நாடு வரையிலான நீண்ட பகுதியில் அமைந்திருந்த நாயக்க மன்னரது எழுபத்தி இரண்டு பாளையங்களின் வீரர்கள் இந்தப் படையெடுப்பில் கலந்து கொள்ளுமாறு செய்யப்பட்டனர். இந்தப் படையெடுப்பினைத் தலைமை தாங்கி நடத்தியவர் திருமலை நாயக்க


  1. S.M. கமால், Dr. - சேதுபதி மன்ன்ர் செப்பேடுகள் (1994 பக்கம்)