பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சேதுபதி மன்னர் வரலாறு

கீழக்கரையில் உள்ள சொக்கநாதர் கோவிலுக்குப் புல்லந்தை, மாயாகுளம் கிராமங்களைச் சர்வமானியமாக வழங்கியதை ஒரு செப்பேடு தெரிவிக்கிறது. இராமநாதபுரம் சீமையில் உள்ள திருப்புல்லாணி என்ற திருத்தலம் இராமாயணத் தொடர்பு உடையது ஆகும். இங்குள்ள இறைவன் தர்ப்பாசன அழகியார் மீது திருமங்கையாழ்வார் பல பாசுரங்களைப் பாடியுள்ளார். தமிழகத்தின் வைணவ பெருமக்கள் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து பக்திப் பரவசத்துடன் ஏற்றிப் போற்றுகின்ற தலம் இதுவே ஆகும். சிதிலமடைந்துள்ள நிலையில் உள்ள பாண்டியர் கால இந்தக் கோயிலை முழுமையாக திருப்பணி செய்த நிலையில், காங்கேய மண்டபம் நுழைவாயில் கோபுரம், கண்ணாடி மண்டபம், தாயார் சன்னதி, பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, திருச்சுற்றுமதில்கள், இராஜ கோபுரம், சக்கரத்தீர்த்தம் மடைப் பள்ளி ஆகிய கட்டுமானங்களுக்குக் காரணமாக இருந்தவர் இந்த மன்னரே ஆவார். இதே போல சேதுநாட்டின் வடபகுதியில் உள்ள இன்னொரு வைணவத் தலமான திருக்கோட்டியூர் கோயிலிலும் பல கட்டளைகளை இந்த மன்னர் நிறுவினார். மேலும் கள்ளர் சீமையில் உள்ள திருமெய்யம் தளத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் திருமெய்யம் அழகியாருக்கும் (பெருமாள்) ரெகுநாத அவசரம் போன்ற கட்டளைகளையும் வேறுபல நிலக்கொடைகளையும் வழங்கியுள்ளார்.

இந்த அறக்கொடைகள் அனைத்தும் சேதுபதி மன்னர் சார்ந்துள்ள இருவேறு சமயங்களான சைவம். வைணவம் என்ற இருபிரிவுகளின் கோயில்களாகும் இந்தக் காரணத்தினால் தான் மேலேகண்ட அறக்கொடைகளை இந்த மன்னர் அந்தத் திருக்கோயில்களுக்கு வழங்கினார் என்று கருதினால் அது தவறு என்பதை அவரது வேறு சில அறக்கொடைகள் புலப்படுத்துகின்றன. அப்பொழுது சேதுநாட்டில் மிகச் சிறுபான்மையினராக சமணர்களும், முஸ்லீம்களும் இருந்து வந்தனர். சேது நாட்டின் வடபகுதியாகத் தாழையூர் நாட்டில் அனுமந்தக் குடியில் அமைந்திருந்த சமணர்களது திருக்கோயிலான மழவராயநாதர் கோவிலும், இஸ்லாமியப் புனிதரான செய்யது முகம்மது புகாரி என்பவரது அடக்கவிடமும் திருமலை சேதுபதி மன்னரது அறக்கொடைகளைப் பெற்றுள்ளன என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.

அன்ன சத்திரங்கள் அமைத்தல்:

இந்த அறக்கொடைகளைத் தவிர இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்குத் தலயாத்திரையாக வருகின்ற பயணிகளது பயன்பட்டிற்காகச் சேதுமார்க்கத்தில் ஆங்காங்கு பல அன்னசத்திரங்களை