பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இயல் - V
ரகுநாத கிழவன் சேதுபதி

மன்னர் திருமலை சேதுபதியை அடுத்துச் சேதுநாட்டின் மன்னர்களான இராஜ சூரிய தேவரும், அதான ரெகுநாத சேதுபதியும் சிறிது காலத்திற்குள் காலமாகி விட்டதால் இந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கிழவன் என்பவர் கி.பி. 1678ல் ரகுநாத கிழவன் சேதுபதி என முடிசூட்டப் பெற்றார். திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் போன்றே இவரது ஆட்சிக்காலமும் நீடித்தாலும் அவரது சாதனைகளை விஞ்சிச் சாதனைகள் படைக்க இயலவில்லை காரணம் இவருக்கு உட்பகை மிகுதியாகத் தோன்றி நாட்டின் பல பகுதிகளிலும் பல குழப்பங்களை ஏற்படுத்தின. என்றாலும் அவை அனைத்தையும் தமது அறிவார்ந்த ஆற்றலினாலும், போர்த் திறமையாலும் நசுக்கி அழித்தார். இவருக்கு மிகுந்த தொல்லை கொடுத்தவர் சேதுபதி அரச குடும்பத்தினரும் செருவத்தி பாளையத்தின் தலைவருமான திரையத் தேவர் ஆவார்.

கள்ளர் சீமை என்று வழங்கிய சேது நாட்டின் வட பகுதியைத் திருமலை சேதுபதி மன்னர் தமது நாட்டின் ஒரு பகுதியாக அமைத்தார் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராகக் குளத்துர் ரெகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார் என, இராமநாதபுரம் மேனுவலில் வரையப் பெற்றுள்ளது.

இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தார்