பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

43

சேதுநாட்டில் கிறித்துவ சமயப்பணி

அப்பொழுது மதுரை கிறித்தவ சபையைச் சேர்ந்த ஜான் டி பிரிட்டோ என்ற போர்ச்சுகல் நாட்டுப் பாதிரியார் சேது நாட்டின் வடபகுதியில் மதமாற்றம் செய்ய வந்தபொழுது செருவத்திப் பாளையக்காரரும் அந்த பாதிரியாரிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டார். அன்றைய சூழ்நிலையில் பாண்டிய நாட்டு கிறித்துவ சமயத்தை ஏற்ற ஒவ்வொரு குடிமகனும் போர்ச்சுகல் நாட்டு மன்னரது குடிமகன் என்ற தகுதியைப் பெறும் வாய்ப்பு இருந்தது. இதனால் செருவத்தி பாளையக்காரருக்குப் போர்ச்சுகல் நாட்டு மன்னரது உதவி கிடைத்தால்..” இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்த சேது மன்னர் பிரிட்டோ பாதிரியாரைச் சோழ மண்டலத்திற்கு நாடு கடத்தி உத்தரவிட்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய ஜான் டி பிரிட்டோ பாதிரியார் கி.பி. 1692ல் மீண்டும் சேது நாட்டிற்கு வந்து மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் சமயத்தொண்டை மேற்கொண்டார். இதனால் சினமுற்ற, மன்னர், செருவத்தி பாளையக்காரரது தலையீட்டையும் புறக்கணித்துப் பாதிரியாருக்கு மரண தண்டனை வழங்கினார். இந்தக் கடுமையான நடவடிக்கையினால் சேதுபதி மன்னரது கடைசி எதிரி செருவத்தி பாளையக்காரரும் ஒழித்துக் கட்டப்பட்டார்.

மற்றுமொரு மன்னருக்கு எதிரான கிளர்ச்சி சாயல்குடி பகுதியில் எழுந்தது. சேதுபதி மன்னர் அந்தப் பகுதிக்கு முகாம் சென்ற பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஏழு பாளையக்காரர்கள் குடிமக்களைத் திரட்டி மன்னரைத் தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்திருந்தனர். தற்செயலாக இந்தச் சதியினைக் கேள்வியுற்ற மன்னர் சதிகாரர்களான பாளையக்காரர்களை ஒருவர் பின் ஒருவராகத் தம்மைச் சந்திக்குமாறு செய்து அவர்களைத் தனித்தனியாகக் கொன்று ஒழிக்க ஏற்பாடு செய்தார். இத்தகைய கடுமையான எதிர் நடவடிக்கைகளினால் குழப்பம். கிளர்ச்சி, சதி என்ற சிக்கல் சேது நாட்டு அரசியலிலிருந்து அகன்று விட்டன. இப்பொழுது மன்னர் அமைதியாகப் பல ஆக்கப் பணிகளில் ஈடுபட்டார்.

திருப்பணிகள்

தமது முன்னோர்களைப் போல இராமேஸ்வரம் திருக்கோயிலில் திருப்பணிகள் பலவற்றை மேற்கொண்டார். இராமேஸ்வர திருக்கோயிலில் அன்றாட பூஜை முதலிய கைங்கரியங்களுக்குத் திருவாடானை வட்டம் இராஜசிங்கமங்கலம் ஏரியின் 48 மடைகளில் ஒரு மடை வழியாக