பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

45

ஆண்டுதோறும் நடைபெறும் பாரிவேட்டைத் திருவிழாவிற்கு வழங்கியுள்ள கிராமங்கள் பற்றிய கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[1] இந்த அரிய நிகழ்ச்சி இந்த சேதுபதி மன்னர் தம்மைச் சார்ந்துள்ள சைவ சமயத்தைப் போன்று வைணவம், சமணம், இஸ்லாம் ஆகிய சமய நிறுவனங்களுக்கு இயல்பான சமயப் பொறையுடன் அறக்கொடைகளை வழங்கியிருப்பதை அவரது செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றன.

இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டத்தில் உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் தர்மத்திற்காக உத்தார நாட்டு கானுர் கிராமத்தைத் தானமாக வழங்கியிருப்பதை அங்குள்ள கி.பி. 1696ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது.[2] மேலும் இந்த மன்னர் கீழ்க்கண்ட திருக்கோயில்களுக்கு அறக்கொடைகளை வழங்கியிருப்பதைச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. திருச்சுழியல் வட்டம் காரேந்தல் கிராமத்து முஸ்லிம் மக்களது தொழுகைப் பள்ளியைப் பராமரிப்பதற்காக இந்த மன்னர் அந்த ஊரினைப் பள்ளிவாசல் தர்மமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தானம் நில மானியக் கணக்கு தெரிவிக்கின்றது.

  1. . சேதுபதி மன்னர்களது ஆட்சியில் குத்தகை நாடு என வழங்கப்பெற்ற அறந்தாங்கிப் பகுதியில் இயங்கி வந்த முருகப்பன் மடம் தர்மத்திற்காகப் பகையணி, பிராந்தணி, திருப்பொற்கோட்டை ஆகிய மூன்று ஊர்களை கி.பி. 1692ல் தானமாக வழங்கினார்.
  2. . சேது நாட்டின் வடக்கே கிழக்குக் கடற்கரைப் பட்டினமான சுந்தரபாண்டியன் பட்டினத்தில் அக்கிரகார தர்மத்திற்காகவும். அந்த ஊரின் தென்மேற்கே உள்ள திருவேகம்பத்து ஏகாம்பர நாதர் சாமி கோயிலுக்கும் ஆக கி.பி. 1695ல் கொந்தாலன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான், சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் ஆகிய ஏழு கிராமங்களைத் தானமாக வழங்கினார்.
  3. . சேது நாட்டின் வடபகுதியில் உள்ள தென்னாலை நாட்டில் அமைந்துள்ள எழுவன் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் எழுவாபுரீஸ்வரர், அகிலாண்ட ஈஸ்வரி ஆகியவர்களின் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவைகளுக்காக இடையன்வயல், கள்ளிக்குடி, புதுக்கோட்டை ஆகிய மூன்று கிராமங்களை கி.பி. 1694ல் தானமாக வழங்கினார்.
  1. கமால் S.M. Dr - சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)
  2. Dr. S.M. கமால் - சேதுபதி மன்னர் கல்வெட்டுகள் (2002)