பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

47

நாயுடுவை திருச்சி ஆட்சிபீடத்தில் அமரச் செய்து அவரது மேல்பிரதிநிதியாக ருஸ்தம்கான் மதுரை அரசியலை நடத்தி வந்தான். இதனைத் தனது நண்பரும் கன்னிவாடி பாளையக்காரருமான சின்னக் கத்திரி நாயக்கரது மூலம் தெரிந்த சேதுபதி மன்னர், மிகவும் வேதனை அடைந்தார். மேலும் கன்னிவாடி பாளையக்காரர் வேண்டுதலின்படி, இராமநாதபுரம் சீமையிலிருந்த திறமையான போர் வீரர்களது அணியுடன் கன்னிவாடி சென்று அவரையும் அழைத்துக்கொண்டு திருச்சி கோட்டைக்குச் சென்றார். இவர்கள் இருவரும் திட்டமிட்டபடி ருஸ்தம்கானை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பதுபோல் அவரைச் சந்தித்தபோது, அவர் எதிர்பாராத நிலைமையில் சேதுபதி மன்னரது வீரர்கள் ருஸ்தம்கானைத் தாக்கி ஒழித்தனர். அடுத்துச் சிறையிலிருந்த மன்னர் சொக்கநாத நாயக்கரையும் விடுதலை செய்து மீண்டும் திருச்சியின் ஆட்சிபீடத்தில் அமர்த்தினார். அதனால் மனம் நெகிழ்ந்த சொக்கநாத நாயக்க மன்னர், சேதுபதி மன்னருக்குப் பல பாராட்டுக்களைச் செய்ததுடன் பரராஜகேசரி (எதிரிகளுக்கு சிங்கம் போன்றவர்) என்ற சிறப்பு விருதையும் வழங்கிச் சிறப்பித்தார்.[1] மேலும் சேதுபதிச் சீமை அரசியல் நிர்வாகம் செவ்வனே நடப்பதற்குத் தமது பிரதானிகளில் ஒருவரான குமாரப் பிள்ளையையும் இராமநாதபுரம் கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.

மதுரை தஞ்சை மன்னர்களது படையெடுப்பு

இந்தப் புதிய பிரதானி சேதுபதி மன்னருக்குத் தக்க உதவிகளைச் செய்தவற்குப் பதிலாக மன்னரது சொந்த நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக நோட்டமிட்டு வந்தார். நாளடைவில் சேதுபதி மன்னரைத் திடீரெனத் தாக்கிக் கைது செய்து திருச்சிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார். இதனையறிந்த சேதுபதி மன்னர் அந்தப் பிரதானி சிறிதும் சந்தேகப்படாத முறையில் அவரைக் கொன்றழித்துவிடும்படி செய்தார். சொக்கநாத நாயக்கர் இவ்விதம் சேதுபதி மன்னரை ஒழித்துக்கட்டத் தீட்டிய இந்தச் சதித் திட்டம் நிறைவேறவில்லை. ஆனால் அந்த மன்னரையடுத்து மதுரையின் அரசியாக பொறுப்பேற்ற இராணி மங்கம்மாள் எவ்வித காரணமும் இன்றி சேதுநாட்டின் மீது கி.பி. 1702ல் படையெடுப்பை மேற்கொண்டார். இந்த படையெடுப்பை எதிர் கொண்ட சேதுபதி மன்னர் மதுரைப் படைகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கினார். திருமலை நாயக்கர் மன்னர் காலம் முதல் மதுரை நாயக்க மன்னரிடம் மறைந்திருந்த பொறாமையும், பகைமையும் அறிவதற்கு இந்தப் போர் இறுதிக் காலமாக அமைந்தது.


  1. Sathya Natha Ayyar. A - History of Madurai Nayaks (1928)