பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

49

கொட்டைப்பாக்கு ஆகியவைகளைப் பெருமளவில் அந்த நாடுகளுக்கெல்லாம் அவரது கப்பல்கள் எடுத்துச் சென்றன. சேதுநாட்டின் முக்கிய துறைமுகங்களாக கீழ்க்கரை, பாம்பன், தேவிபட்டினம், தொண்டியும் செழித்து விளங்கின. இத்தகைய வியாபாரச் செழுமையில் ஈடுபட்டிருந்த பல ஊர்களைச் சேர்ந்த முஸ்லீம் வணிகர்கள் சேதுமன்னரது குடிகளாக இந்த நாட்டில் நிலைத்து வாழ்ந்தனர். இவர்களைப் போன்றே டச்சுக்கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரும், ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரும், சேது நாட்டில் அவர்களுக்குத் தேவையான கைத்தறிகள், தானியங்கள், மிளகு ஆகிய பொருள்களைக் கொள்முதல் செய்து வந்ததால் அவர்களது நாணயங்களும் சேது நாட்டின் செலாவணியில் இடம் பெற்றன.

இவ்விதம் சேது நாட்டின் அரசியல் வலிமையையும், வணிகச் செழுமையையும், சமுதாய அமைதியையும் மிக நீண்ட ஆட்சிக்காலமாக முப்பத்திரண்டு ஆண்டுகள் நீடித்த ரெகுநாத கிழவன் சேதுபதி ஆட்சி கி.பி. 1710இல் அவரது மரணத்துடன் முடிவு பெற்றது.