பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

51



II முத்துவிஜயரகுநாத சேதுபதி

முத்துவயிரவநாத சேதுபதியின் இளைய சகோதரர் திருவுடையாத் தேவர் என்பவர் கி.பி.1713ல் முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் சேதுபதி மன்னரானார். இதனை உறுதிப்படுத்தும் இவரது முதலாவது செப்பேடு கி.பி.1713ல் வழங்கப்பட்டுள்ளது.

திருவுடையாத் தேவர் இராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி திங்களில் நடைபெறும் விஜயதசமி (தசரா விழா) விழா அன்று முடிசூட்டிக் கொண்டதால் இவரது அதிகாரப் பூர்வமான பெயர் முத்து விஜய ரகுநாத சேதுபதி என வழங்கப்பட்டது. ஆனால் முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற அடைமொழி இவருக்கு முன் இருந்த ரெகுநாத கிழவன் சேதுபதிக்கும் ரெகுநாத திருமலை சேதுபதிக்கும் இருந்ததை அவர்களது கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. இந்த மன்னரது ஆட்சி கி.பி.1725 வரை நீடித்த குறுகிய கால ஆட்சியாக இருந்தாலும் இந்தக் காலத்தில் சில அரிய சாதனைகளை இந்த மன்னர் நிகழ்த்தியுள்ளார். முதலாவதாகச் சேது நாட்டின் நிர்வாகத்தைச் சீரமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். திருமலை ரகுநாத சேதுபதி ஆட்சியில் சேதுநாட்டின் எல்லைகள் வடகிழக்கு வடக்கு. தெற்கு ஆகிய மூன்று திக்குகளிலும், விரிவடைந்த பொழுதிலும் அவரது ஆட்சிகாலத்தில் இந்த பெரிய நிலப்பரப்பின் நிர்வாகத்தைச் சீரமைக்க இயலவில்லை. அவரை அடுத்து சேதுபதிப் பட்டம் பெற்ற ரெகுநாத கிழவன் சேதுபதிக்கு உள்நாட்டின் குழப்பங்களைச் செம்மை செய்வதில் காலம் கழிந்ததால் நிர்வாகத் துறையில் புதியன எதையும் புகுத்த முடியவில்லை.

செம்மையான நிர்வாகம் நடைபெற

ஆதலால் இந்த மன்னர் அன்றைய சேதுநாட்டை 72 இராணுவப் பிரிவுகளாகப் பிரித்ததுடன் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு சேர்வைக்காரரை நியமித்து அதில் அடங்கியுள்ள கிராமங்களின் வருவாய் கணக்குகளைப் பராமரிப்பதற்காக மதுரைச் சீமைகளிலிருந்து பட்டோலை பிடித்து எழுதும் வேளாண் குடிமக்களை வரவழைத்து அவர்களை நாட்டுக்கணக்கு என்ற பணியில் அமர்த்தினார். அடுத்ததாக அரசின் வலிமையை நிலைநிறுத்தி வெளிப்புற எதிரிகளிடமிருந்து சேதுநாட்டைக் காப்பதற்காக மூன்று புதிய கோட்டைகளை முறையே ராஜசிங்கமங்கலம், பாம்பன், கமுதி ஆகிய ஊர்களில் புதிதாக அமைத்தார். கமுதிக்கோட்டை புதுமையான முறையில் வட்டவடிவில் மூன்று சுற்று மதில்களுடன் அமைக்கப்பட்டது. இதனை அமைத்தவர்கள் பிரெஞ்சு நாட்டு பொறியியல் வல்லுநர்கள் என