பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இயல் - VII
I. முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி

இந்த மன்னர் பாலகனாய் இருக்கும்போது கி.பி. 1762-ல் பட்டம் சூட்டப்பட்டதால் இவரது அரசப் பிரதிநிதியாக இவரது தாயார் முத்துத் திருவாயி நாச்சியார் பொறுப்புகளை ஏற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இவருக்குப் பிச்சை பிள்ளை. தாமோதரன் பிள்ளை என்ற இரு பிரதானிகள் உதவியாகச் செயல்பட்டு வந்தனர்.

இந்தக் கால கட்டத்தில் தென்னகத்தில் ஆற்காடு நவாபின் ஆதிக்கம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆயுத வலிமை கொண்டு சென்னையில் நிறுவப்பட்டிருந்தது. ஆற்காடு நவாபிற்குக் கட்டுப்படாமல் அவருடைய ஆதிக்கத்தை எதிர்த்த மதுரை, நெல்லைசீமைப் பாளையக்காரர்களை கி.பி. 1751 முதல் மேற்கொண்ட பல போர்களின் மூலம் அவர்களை எல்லாம் அடக்கி ஒடுக்கிக் கப்பத் தொகையை நவாப் பெற்று வந்தார். அப்பொழுது தமிழகத்தில் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்ற நான்கு தன்னரசுகள் மட்டும் இருந்தன. ஏற்கனவே தஞ்சையை நவாபும், ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியாரும் பங்கிட்டுக் கொண்டு பெயரளவில் தஞ்சை மன்னரைத் தஞ்சைச் சீமை அரசராக அங்கீகரித்திருந்தனர். எஞ்சிய மூன்று தன்னரசுகளில் கள்ளர் சீமை மன்னரான புதுக்கோட்டை மன்னரை விட்டுவிட்டு, மறவர் சீமையின் மன்னர்களான இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளின் மீது படையெடுப்பதற்கு ஆற்காடு நவாபு திட்டமிட்டு வந்தார்.

இதற்கிடையில் தஞ்சை மன்னராக இருந்த துல்ஜாஜி கி.பி. 1771-ல் மறவர் சீமை மீது படையெடுத்தார். இராமநாதபுரம் சீமையின் வடக்குப் பகுதிகளை வேகமாகக் கடந்து வந்து அனுமந்தக்குடி கோட்டையைத், தஞ்சைப் படைகள் கைப்பற்றி விட்டன. இதையறிந்த ராணி முத்துத் திருவாயி நாச்சியாரும் பிரதானி பிச்சைப் பிள்ளையும் ஆக்கிரமிப்பாளர்களைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். இராமநாதபுரம் சீமைக்கு உரிமை கோரிய ஆறுமுகம் கோட்டை,