பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சேதுபதி மன்னர் வரலாறு

சீர்திருத்தங்கள்:

இவரது நிர்வாகத்தின்போது இராமநாதபுரம் சீமையின் பெரும் பகுதிக்கும் பிரதானி ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று அங்குள்ள மண்வளம். நீர் வளம் ஆகியவைகளை ஆய்வு செய்து, அந்த நிலங்களுக்குரிய தீர்வையைப் பணமாக பெறும் முறையை ஏற்படுத்தினார் மற்றும் பராமரிப்பில்லாமல் பழுதுபட்டுப் போயுள்ள ஆலயங்களையும், மடங்களையும் செப்பனிடுவதற்காக அரசாங்கத்திற்குச் செலுத்தப்படுகின்ற தீர்வையில் ஒரு சிறு பகுதியை ஜாரி மகமை என்ற பெயரில் ஒரு பொதுநிதியம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இராமேஸ்வரம் திருக்கோயிலின் 3வது பிரகார முற்றுப்பெறும் தருவாயில் மிகச் சிறப்பாக அந்தத் திருப்பணியில் ஈடுபட்டதற்காக, அவரது திருஉருவத்தை கீழக்கோபுர வாசலில் நிறுவியுள்ளதை இன்னும் நாம் காணலாம். இதேபோல் இராமநாதபுரத்திற்கு அடுத்து சேதுமன்னர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருமருதூர் (எ) நயினார் கோவில் ஆலயத்தையும் திருப்பணி செய்வதற்குச் சேதுமன்னர் இவரை நியமித்திருந்தார். அவரும் நாற்பது நாள்கள் நீடித்த அந்தத் திருப்பணியைச் சிறப்பாக முற்றுப்பெறச் செய்ததை அங்குள்ள கல்வெட்டு இன்னும் சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கிறது.[1]

இந்தப் பிரதானியாரது நிர்வாகத்தில் உருப்பெற்றதுதான் இன்று மதுரை மாவட்டத்தைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் பெரியார் அனைத்திட்டம் ஆகும். சேது நாட்டில் 12 மாதங்களில் பெரும்பாலான பகுதி வறட்சி மிக்கதாக இருப்பதால் இந்தச் சீமையைத் தஞ்சைச் சீமைபோல் நீர்வளம் மிக்கதாகச் செய்யவேண்டும் என்று திட்டமிட்ட சேது மன்னருக்குப் பிரதானி இந்தத் திட்டத்தை வரைந்து கொடுத்தார். இதன்படி மதுரை மாவட்டத்தின் வருச நாட்டின் மலைப்பகுதியில் தோற்றம் பெறும் வைகை ஆறு சில பாறைகளின் இடர்ப்பாடுகளின் காரணமாக வைகையின் வெள்ளம் முழுவதும் கிழக்கு நோக்கி மதுரை வழியாக இராமநாதபுரம் சீமைக்கு வந்தடைவதற்குப் பதிலாக, மேற்கே திசைமாறிச் சென்று அரபிக் கடலில் வீணாகக் கலந்து வந்தது. அதைத் தடுத்து நிறுத்தி வைகை வெள்ளத்தை முழுமையாகச் சேதுநாட்டில் பயன்படுத்திக் கொள்வதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படையாகும். ஆனால் காலச் சூழலில் சேதுபதி மன்னரும் சேது நாட்டு அரசராக நீடிக்கவில்லை. கி.பி. 1792-ல் முத்திருளப்ப பிள்ளையும் அவரின் பிரதானியாகப் பணியாற்ற முடியாத துரதிருஷ்ட நிலை. காலம் மாறியது.


  1. கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் - 2002