பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

67

இந்த மன்னரைத் தீர்த்துக் கட்டுவது என கி.பி. 1794-ல் கும்பெனித் தலைமை முடிவு செய்தது. ஆனால் இந்த ஆண்டிலும் வறட்சி தொடர்ந்ததால் அவர்களது திட்டத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குத் தள்ளி வைத்தனர். கி.பி. 1795-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் நாள் வைகறையில் பாளையங்கோட்டை, கயத்தாறு ஆகிய ஊர்களிலிருந்து வந்த கும்பெனியாரின் பெரும்படை இராமநாதபுரம் கோட்டைக்குள் புகுந்தது. கோட்டையின் பொறுப்பு தளபதி மார்ட்டின்சிடம் இருந்ததால், இந்தப் படை எவ்வித இடையூறும் இல்லாமல் அரண்மனையைச் சுற்றி வளைத்து இரண்டாவது முறையாக மன்னரைக் கைது செய்தது. சிறிதும் எதிர்பாராது நடந்த இந்த நிகழ்ச்சியினால் பெரிதும் ஏமாற்றமடைந்த மன்னர் வெள்ளையரது கட்டளைக்குப் பணிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அடுத்தநாள் பாதுகாப்புடன் மீண்டும் திருச்சிக் கோட்டைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிறை வைக்கப்பட்டார். இராமநாதபுரம் கோட்டைப் பொறுப்பிலிருந்த மார்ட்டின்சும் கலெக்டர் பவுனியும் இராமநாதபுரம் அரண்மனையைக் கொள்ளையிட்டனர்.

ஆங்கிலேய ஆட்சி

கும்பெனியாருக்கும் முத்துராமலிங்க சேதுபதிக்கும் இடையில் பகையுணர்வு வளர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் அவரது தமக்கையான மங்களேஸ்வரி நாச்சியார் கும்பெனியாரிடம் சேதுநாட்டு வாரிசு தான் எனக் கூறி தனக்கு சேது நாட்டின் ஆட்சியுரிமையை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை வலியுறுத்துவதற்காகத் தனது கணவர் இராமசாமித் தேவருடன் சென்னை சென்று ஆற்காடு நவாபு, கும்பெனி கவர்னர் மற்றும் அவரது அலுவலர்கள் அனைவரையும் சந்தித்து தனது வேண்டுகோளை வலியுறுத்தியும் அதற்காகப் பெருந்தொகையைக் கையூட்டாக வழங்கி அரச பதவியைப் பெறப் பெரிதும் முயன்றார். கும்பெனித் தலைமை மங்களேஸ்வரி நாச்சியாரை சேதுபதியின் அடுத்த வாரிசாக ஏற்றுக் கொண்டபோதிலும் அவருக்கு அதிகார மாற்றம் செய்யாமல் சேதுநாட்டின் நிர்வாகத்தைக்கும்பெனியாரே எட்டு ஆண்டுகள் நடத்தி வந்தனர்.



II இராமன் இல்லாத அயோத்தி

இதற்கிடையில் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் தளபதிகளில் மிகுந்த இராஜ விசுவாமுடைய சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் என்பவர் மன்னரைத் திருச்சிச் சிறையிலிருந்து தப்புவிப்பதற்கான இரகசிய முயற்சிகளில் ஈடுபட்டார். சித்திரங்குடி என்பது ஆப்பனூர் நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமம். இந்த ஊர் எப்பொழுதுமே இராச விசுவாசத்திலும்