பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
V

மறைந்து போய் விட்டன. எனினும் தாம் அரிதின் முயன்று தொகுத்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், செவிவழிச் செய்திகள், தாமே நேரில் கண்டவை ஆகியவற்றைக் கொண்டு இச்சிறுநூலைச் சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்நூலைச் “சுற்றுலாப் பயணிகட்கான கையேடு” என எளிமையாகவும் இல்லாமல் உயர் ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய ஆய்வேடு போலக் கடினமாகவுமில்லாமல் நடுவணதாகப் படைத்துள்ளார். சான்றுகளைக் காட்டி எழுதும் உத்தியினை ஆங்காங்கே ஒல்லுமிடமெல்லாம் பின்பற்றியுள்ளார். சேதுபதி மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத் திற்காற்றியுள்ள பணி, அவர்தம் ஆன்மீகப் பணி, தமிழ்மொழிப் பணி என்ற மூன்று இலக்குகளைக் கருத்திற்கொண்டு ஆசிரியர் நூலைப் படைத்துள்ளார். தமக்குக் கிடைத்த சான்றுகள், ஆவணங்கள், முதலானவற்றைப் பட்டியலிட்டு நூலின் பின்னிணைப்புகளாகத் தமது நூலை முழுமைப்படுத்தியுள்ளார்.

கண்பார்வை மங்கிய நிலை, உடல் நலக்குறைவு முதலான தடைகள் இருந்தபோதும் தளராது அரிதின் முயன்று இந்நூலைப் படைத்துள்ளார். இவரது வாழ்வும் பணியும் இன்றைய இளைஞர்கட்கு வழிகாட்டிகளாக விளங்குவனவாகும். நூல் அளவிற் சிறிதாயினும் கிடைத்தவற்றைக் கொண்டு சரளமான நடையில் சொல்லப்பட்டிருக்கும் விதத்தால் நம் பாராட்டுதலுக்குரியதாகிறது. சேதுநாட்டு வரலாற்றை அறியத் துணைபுரியும் நல்ல தொடக்க நூல் இது. தமிழ் மக்கள் இந்நூலை வாங்கிப் படித்துப் பயன் கொள்வார்களாக.

ஆசிரியர் நீடு வாழ்ந்து மேலும் பல நல்ல நூல்களைப் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கோ. விசயவேணு கோபால்

புதுச்சேரி

20.11.03