பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சேதுபதி மன்னர் வரலாறு

செயல்பட்டார். மயிலப்பன் சேர்வைக்காரரது நடவடிக்கைகளையும், அவர் மருது சகோதரர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு புரிந்துகொண்ட கலெக்டர் லூசிங்டன் மயிலப்பன் சேர்வைக்காரரைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி மருது சகோதரர்களுக்கு தாக்கீது அனுப்பினர். ஏற்கனவே கும்பெனியாரை இறுதியாக எதிர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மருது சகோதரர்கள் கலெக்டர் உத்திரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

மருது சகோதரர்களது இறுதி முயற்சியான காளையார் கோவில் போரில் 02-10-1801 ஆம் தேதி தோல்வியுற்றபின் 24-10-01 இல் தூக்கிலிடப்பட்டனர். அவர்களைச் சார்ந்திருந்த மக்கள் தலைவர்களில் பிரபலமான மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரையும், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரையும் பிடிப்பதற்கு தீவிரமான முயற்சிகளில் கும்பெனித் தலைமை இறங்கியது. முத்துக்கருப்பத் தேவர் கைது செய்யப்பட்டதால், தன்னந் தனியாக மயிலப்பன் சேர்வைக்காரர் முதுகளத்துர் கமுதிப் பகுதிகளில் தலைமறைவாகச் சுற்றித் திரிந்தார். அவர் காட்டிக்கொடுக்கப்பட்டு 6.8.1802 இல் அபிராமத்தில் துக்கிலிடப்பட்டார். இவ்விதம் சேதுபதி மன்னரை விடுவிப்பதற்காகச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதையெல்லாம் அறிந்த சேதுபதி மன்னர் சென்னைக் கோட்டையி லிருந்தவாறு மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக 23-01-1809 ஆம் தேதி இரவில் மன்னர் காலமானார்.

III தன்னரசு நிலையிலிருந்து தாழ்ந்த சேதுநாடு


இராமாயண காலம் தொட்டுஇ. தொடர்புள்ளதாகப் பெருமை பெற்றிருந்த சேதுபதி மன்னர்களது தன்னரசு 8.2.1795இல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியாரால் கைப்பற்றப்பட்டு சேதுபதிச் சீமை என்ற தன்னரசு நிலையை இழந்தது. மறவர் சீமையின் மகுடபதிகளாக மட்டுமல்லாமல் தெய்வீகத் திருப்பணிகளுக்கும் தமிழ் வளர்ச்சிப் பணிக்கும் சமுதாயப் பணிகளுக்கும் ஊற்றுக் கண்ணாக விளங்கிய சேதுபதிகளின் ஆட்சி எதிர்பாராத வண்ணம் முற்றுப்புள்ளி பெற்றதால் அந்த மன்னர்களால் தொடக்கம் பெற்றுத் தொடர்ந்த திருப்பணிகள் பல தடைபெற்று நின்றன.

குறிப்பாக இராமேஸ்வரம் திருக்கோயிலில் வடக்கு தெற்கு வாயில்களில் கால்கோள் இடப்பெற்ற இராஜ கோபுரங்கள்