பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

73

இந்த நிலங்களைக் குடிகள் அவர்களே உழுது, வித்திட்டுக்களை பறித்து, வேளாண்மை செய்து வந்தனர். அரசரின் அலுவலர்கள் அறுவடையின் போது களத்துமேட்டில் இருந்து அறுவடையான கதிரடிப்பைக் கண்காணித்து, மொத்தத்தில் கிடைக்கும் தானியத்தின் மதிப்பை அளவிட்டனர். இவருக்கு உதவியாக அளவன், பொலிதள்ளி என்ற உதவியாளர்கள் பணிபுரிந்தனர். மொத்த விளைச்சலில் குடிமக்களது செலவுகளையும், களத்துமேட்டில் அளந்து கொடுக்கப்படும் களத்துப் பிச்சை என்ற அன்பளிப்புத் தானிய அளவினையும் நீக்கிவிட்டு, எஞ்சியுள்ள மணிகளை அளவன் மூலம் அளந்து சமமாகப் பங்கிட்டு, ஒரு பகுதி மன்னருக்கும், மற்றொரு பகுதி சம்பந்தப்பட்ட குடிமகனுக்கும் வழங்கப்பட்டது. மன்னரது பங்காகப் பெறப்பட்ட தானியத்தை கிராமங்களுக்கிடையில் ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்த ‘சேகரம் பட்டறை' என்ற கிடங்குகளில் சேகரித்து வைத்தனர்.

மற்றும், இந்த விளைச்சலுக்கான தீர்வையாகப் பெற்ற தானியங்களைத் தவிர கிராமக் குடிமக்களிடம் இருந்து கத்திப்பெட்டி வரி, சீதாரி வரி, நன்மாட்டு வரி, சாணார் வரி, வரைஒலை வரி, தறிக்கடமை என்ற வரி இனங்களும் குடிமக்களது தொழிலுக்கு ஏற்ற வகையில் வசூலிக்கப்பட்டு வந்தன. இவை தவிர ஆங்காங்கே சில்லறையாக விற்பனை செய்யப்படும் தானியங்களுக்கு கைஎடுப்பு, அள்ளுத்தீர்வை (ஒரு கையால் அள்ளுதல், இரண்டு கைகளாலும் அள்ளுதல்) என்ற வரிப்பாடுகளும் இருந்து வந்தது தெரிகிறது.

பெரும்பாலும், மழைப்பெருக்கினால் கிடைக்கும் நீரினைத் தேக்கங்களில் சேமித்து வைத்து அவைகளை முறையாக மடை அல்லது கலுங்கு வழியாகவும், வாய்க்கால்கள் மூலமாகவும் விளைநிலங்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்பட்டு வந்தது. முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில், (கி.பி. 1792-ல்) வைகை நதியிலிருந்து வரத்துக்கால்கள் மூலமாக அபிராமம் கண்மாய்க்கு வரப்பெறுகின்ற வெள்ளத்தைச் சிவகங்கைப் பிரதானிகள். தடை செய்தனர் என்ற செய்தியினை அறிந்த சேது மன்னர் தமது வீரர்களுடன் விரைந்து சென்று அபிராமம் கண்மாய்க்கு வருகின்ற கால்களின் அடைப்புக்களை அகற்றி நீர்ப்பாய்ச்சலுக்கு உதவினார் என்ற செய்தி வரலாற்றில் பதிவு பெற்றுள்ளது. இதில் இருந்து சேது மன்னர்கள் தமது நாட்டுக் குடிமக்களது விவசாயத் தொழிலில் நேரடியாக எவ்விதம் கவனம் செலுத்தினர் என்பதை அறிய முடிகிறது!

இந்த மன்னரது முன்னவர்கள் குடிகளது வேளாண்மைத் தொழிலுக்கு உதவுவதற்காகப் பல புதிய கண்மாய்களையும்.