பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூலினைப் பற்றி

தமிழக முடியுடை மன்னர்கள் பற்றிய பல நூல்கள் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், ஆற்காட்டு நவாப் என்ற ஆட்சியாளர்களைப் பற்றி அந்த நூல்களில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர் வரிசையில் இறுதியாகப் பிரதான இடம் வகித்து வந்த இந்திய நாடு விடுதலை பெறும் வரை ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர்களைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரவில்லை.

இதனைப் போன்றே கொங்குச் சோழர்கள், மதுரை சுல்த்தான்கள், வானாதிராயர்கள், சேது நாட்டு மன்னர்கள் ஆகியோர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் வரையப்படவில்லை. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இவர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் இன்றியமையாதவை.

இந்தக் குறைபாட்டினை நீக்கும் வகையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வரலாற்றில் இடத்தைப் பெற்று பின்னர் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் சீரழிவு எய்தி மீண்டும் கி.பி.17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்ற சேதுநாட்டு மன்னர்களைப் பற்றிய முழுமையான நூலாக இது வெளியிடப்படுகிறது.

பாண்டிய நாட்டில் கிழக்குக் கடற்கரையினை ஆட்சிக்களமாகக் கொண்ட இந்த மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழர்களது ஆன்மீக வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் செழுமைக்கும் தளராது பணியாற்றியவர்கள் ஆவர். ஆதலால் இவர்களது வரலாற்றைத் தமிழக வரலாற்றின் ஒரு சிறப்புப் பகுதியாகக் கொள்ளலாம்.

இதுவரை இந்த மன்னர்களைப் பற்றி வெளிவந்த ஆங்கில, தமிழ் நூல்களில் இடம் பெறாத பல செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த வரலாற்றுத் தொகுப்பினை வரைவதற்கு சேதுபதி மன்னர்களது கல்வெட்டுக்கள், செப்பேடுகள். ஒலை முறிகள், ஆவணங்கள் ஆகிய