பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சேதுபதி மன்னர் வரலாறு

மலையாடுகள் இருந்த விபரம் அவரது 1893-ஆம் ஆண்டு நாட்குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. இவரது மைந்தரான இராஜ ராஜேஸ்வர முத்து ராமலிங்க சேதுபதி இராமலிங்க விலாசத்தின் கிழக்கே உள்ள அரண்மனை மதிலை அகற்றி விட்டு ஒரு அழகிய புதிய நுழைவாயில் ஒன்றை அமைத்தார். இன்றும் அந்த வாயில் ‘போலீஸ் கேட்” என்ற பெயருடன் பயன்பட்டு வருகிறது. இந்த மன்னர் இராஜ ராஜேஸ்வரி ஆலயத்திற்கு மேற்கிலும் அந்தப்புரத்திற்கு கிழக்கிலும் இடைப்பட்ட இடத்தில் கல்யாண மஹால் என்ற புதிய கட்டிடத்தையும் அதற்கு எதிரே சரஸ்வதி மகால் என்ற நூலகக் கட்டிடத்தையும் அமைத்தார். இவைகளைத் தவிர இந்த அரண்மனைப் பகுதியில் ஜமீன்தாரர் ஆட்சியில் எந்த அமைப்புகளும் நிர்மாணிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணங்கள்

ஏறத்தாழ 12-ஆம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து வந்துள்ள சேது மன்னர்களது ஆட்சி பற்றிய அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆதலால் கள்ளர் சீமை கானாட்டு திருமெய்யத்திலும், பின்னர் சாலை கிராமத்தை அடுத்த விரையாத கண்டனில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை நீடித்த இந்த மன்னர்களது ஆட்சியினைப் பற்றிய ஆவணங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. கி.பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை போகலூரிலும், இராமநாதபுரத்திலும் நிலைத்திருந்த சேது மன்னர்களது ஆட்சியைப் பற்றிய விவரங்களை அறிவதற்குக் கீழ்கண்ட ஆவணங்கள் மட்டும் பயனுள்ளவையாக அமைந்து விளங்குகின்றன.

  1. . Old Historical Manuscripts by Taylor Vol II (1841)
  2. . Manual of Madura Country by A. Nelson (1861)
  3. . Manual of Ramnad Samasthanam by Raja Ram Rao (1891)
  4. . இராமநாதபுரம் நிலமான்ய ஒலைக் கணக்கு (1810)
  5. . Tamil Nadu Archives Records from 1772 AD
  6. . Diary of General Patterson (1796) - London Museum
  7. . இராமப் பையன் அம்மானை - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு
  8. . கான்சாயபு சண்டை - (நாட்டுப்புற இலக்கியம்)
  9. . Records of outer East India Company (Calonial Archives the Hague)