பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

89

.பிள்ளையார் ஆலயம், தாருகாவனத்தில் சிவபெருமான் பிக்ஷாடனராக ரிஷி பத்தினிகளுடன் உள்ள காட்சி மற்றும் அவரது ஊர்த்துவ நடனம். இந்தச் சித்திரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட வண்ணங்களினால் ஒரே காலத்தில் வரையப் பெற்றவை என்று தெரிய வருகிறது. தெற்குச் சுவற்றில் கிழக்குக் கோடியில் ஆற்காட்டு நவாபின் பவனி, அரண்மனைப் பணியாளர்கள் அன்பளிப்புத் தட்டுக்களை ஏந்திச்செல்வது. சேதுபதி மன்னர் தமது மடியில் பெண் குழந்தை ஒன்றை வைத்துக் கொண்டு ஆங்கிலேய துரை ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருப்பது ஆகிய காட்சி இந்த ஒவியங்களில் காணப்படுகிறது. வண்ணங்களும் இந்த ஓவிய உத்திகளும் காலத்தால் பிற்பட்டவை - பெரும்பாலும் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

மண்டபத்தின் இடைக்கட்டில் வடக்குச் சுவற்றிலும் தூண்களுக்கு இடையிலான வில் வளைவுகளிலும், வேட்டையாடும் காட்சி, மீன்கள் நிறைந்த தடாகம், படுத்திருக்கும் புலவர் ஒருவரது கால்களை வருடி ஒருவர் உபச்சாரம் செய்யும் காட்சி, இவைகளுக்கு மேலே இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள நீண்ட மாடத்தில் பல புராணக்காட்சிகள், கதை உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மாளிகையின் மேற்குப்பகுதியில் கருவறை போல் அமைக்கப்பட்டுள்ள மன்னரது அறையின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் மேற்குச் சுவற்றிலும் கீழ்ப் பகுதிகளிலும் பாகவதக் கதைக் காட்சிகளும் இராமாயணக் காட்சிகளும் - இராமனது பிறப்பு முதல் சீதையின் திருமணம் வரையான காட்சிகளும் தீட்டப்பட்டுள்ளன. இந்த அறையின் வில் வளைவுகளில்,

1. இராமநாதபுரம் அரண்மனையில் உறங்கி எழுந்த அரச பிராட்டி மங்கலப் பொருள்களான கண்ணாடி, கிளி ஆகியவைகளைப் பார்க்கும் ஓவியம்

2. சேதுபதி மன்னர் அரண்மனைப் பெண்களுடன் வில்லைத் தாங்கி பறவைகள் வேட்டைக்குச் செல்லும் ஒவியம்

3. சேது நாட்டுப் பெண்கள் நீண்ட கழிகளுடன் காட்சியளிப்பது

4. சேதுபதி மன்னர் பெருமாளிடமிருந்து செங்கோல் பெறுவது

5. சேதுபதி மன்னர் முன் பண்டிதர் ஒருவர் அமர்ந்து இராமாயண விரிவுரை செய்வது

6. சேதுபதி மன்னரிடம் அளிப்பதற்காக மூன்று பரங்கிகள் அன்பளிப்புத் தட்டுக்களை ஏந்தி வருதல்

7. அரசவையில் நடன மங்கையர் நாட்டியம் ஆடுதல்