பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சேதுபதி மன்னர் வரலாறு

இவை போன்ற கண்ணைக் கவரும் வண்ணங்கள் நிறைந்த ஒவியங்கள் பல இந்த அறையின் சுவர்களிலும் வில் வளைவுகளிலும் விதானங்களிலும் இடம் பெற்றுள்ளன. இந்த ஒவியங்கள் அனைத்தும் ஆந்திர நாட்டு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளன என்பதை அந்த ஒவியர்கள் கையாண்டுள்ள உத்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அறையின் மேல் வீடு மன்னரது பள்ளியறையாக அமைந்திருந்ததால் அந்த அறையின் கிழக்கு வடக்குச் சுவர்களில் மன்னர் மங்கையருடன் புனல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒவியமும் பத்துப் பதினைந்து பெண்கள் யானை போன்ற அமைப்பில் சேர்ந்து காட்சியளிப்பது.

இந்த ஓவியங்கள் அனைத்தும் முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னரது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1713 - 1725-ல்) உருப்பெற்றுள்ளன. சரியான காலம் அறியத் தக்கதாக இல்லை. அத்துடன் இந்த ஓவியங்கள் அனைத்தையும் ஒரு சேர ஆய்வு செய்யும்பொழுது அவை - மகா மண்டபத்தில் இடம் பெற்று இருப்பவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான ஒவியர்களாலும் இடைக்கட்டிலும், அறையிலும் வரையப் பெற்றிருக்கும் ஓவியங்கள் மற்றொரு வகையான ஓவியர்களாலும் அந்த அறையின் மேல் வீட்டில் தீட்டப் பெற்றிருக்கும் கிளர்ச்சியூட்டும் ஓவியங்கள் பிறிதொரு வகை ஓவியர்களாலும் வரையப் பெற்றுள்ளன என்பது புலனாகிறது. ஒவியர்களும், ஓவியங்களும் எந்த வகையை, எந்தக் காலத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் இவை சேது நாட்டிற்குக் கிடைத்துள்ள சித்திரக் கருவூலமாகப் போற்றப்பட வேண்டியவையாகும். நமது நாடு முழுவதிலும் பல ஊர்களில் பல மன்னர்களின் மாளிகைகளில் இத்தகைய ஓவியங்கள் ஆங்காங்கு காணப்பட்டாலும் இராமலிங்க விலாசம் அரண்மனை ஒவியங்களைப் போல ஒரு சேர ஒரே மாளிகையில் ஒரு அங்குலம் சுவற்றைக் கூட இடைவெளி இல்லாமல் ஒவியங்கள் தீட்டப்பட்டிருப்பது. வேறு எங்கும் காணப்படாத அதிசயமாகும். ஆதலால் இந்த மாளிகை ஓவியங்களை அஜந்தா குகை ஒவியங்களுக்கு ஒப்பாகச் சொல்வதில் வியப்பு ஒன்றும் இல்லை.

V மூலைக் கொத்தளம்

சேது மன்னர்களது சிறப்பான தன்னரசு ஆட்சியினைக் காலமெல்லாம் தெரிவித்துக் கொண்டிருக்கும் மற்றொரு வரலாற்று எச்சம், இராமநாதபுரம் நகரின் தென்மேற்கே உள்ள மூலைக்கொத்தளம் ஆகும். இந்த அமைப்பு கிழவன் ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் மன்னரது