பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சேதுபதி மன்னர் வரலாறு

சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகச் சென்னைக் கோட்டையில் இருந்த கும்பெனிக் கவர்னர், தளபதி அக்னியூ என்பவரைச் சிவகங்கைச் சீமைக்கு அனுப்பி வைத்தார். மருது சேர்வைக்காரருடன் மோதலை ஏற்படுத்தி வெற்றி கொள்வதற்கு முன்னர் புதிய திட்டம் ஒன்றைத் தளபதி அக்கினியூ நிறைவேற்றினார்.

மக்களிடையே மருது சேர்வைக்காரர்களுக்கு உள்ள பிடிப்பினை அகற்றுவதற்கும், சிவகங்கைச் சீமை மன்னரது வாரிசு ஒருவரை அரசு அங்கீகரிப்பதன் வழி எதிர் அணிகளிலிருந்து இராஜ விசுவாசிகளான மக்களைத் திரட்டுவது என்பது அக்னியூவின் திட்டமாகும். இந்தத் திட்டம் சரியாக நிறைவேற்றப்பட்டது.

இதற்காகக் கும்பெனிக் கவர்னர் ஜூலை 1801-ல் ஒரு பொது விளம்பரம் ஒன்றைச் சிவகங்கைச் சீமை மக்களிடையே பிரசித்தம் செய்தார். சிவகங்கைச் சீமை நிர்வாகத்தை இயக்கி வந்த மருது சேர்வைக்காரர்கள் சிவகங்கை அரசவழியினர் அல்லர் என்றும், அப்பொழுது சிவகங்கை மன்னராக இருந்த வேங்கன் பெரிய உடையாத் தேவர் சிவகங்கை சேர்வைக்காரர்களுக்குப் பயந்து அடங்கிச் செயல்படுகிறார் என்றும் ஆற்காட்டு நவாப்பின் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் ஆங்கிலேயர் என்றும், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சிவகங்கைச் சீமை மக்களைத் தவறான வழியில் விட்டுச் சென்று கொண்டிருக்கும் மருது சேர்வைக்காரரைப் பின்பற்றாமல் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு மக்கள் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றும், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்துடன் அமைந்துவிடாமல் தளபதி அக்னியூ புதுக்கோட்டை தொண்டைமானது உதவியுடன் அறந்தாங்கிக் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த சிவகங்கை மன்னரது வழியினரான படைமாத்துர் கெளரி வல்லப பெரிய உடையாத் தேவர் என்பவரைத் தேடிப்பிடித்து வந்து, சிவகங்கையை அடுத்த சோழபுரம் கிராமத்தில் 12.09.1801-ல் அவருக்குச் சிவகங்கை ஜமீன்தார் என்ற பட்டத்தினையும், கிழக்கிந்தியக் கம்பெனியார் வழங்கினர். தமிழகத்தில் முதன்முறையாக ஜமீன்தாரி முறையினை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட முதல் ஜமீன்தார் சிவகங்கை கெளரி வல்லப உடையாத் தேவர் ஆவார்.

இராமநாதபுரம் ஜமீந்தாரி:

இராமநாதபுரம் சீமையைப் பொறுத்தவரை மன்னர் முத்து ராமலிங்க சேதுபதி 08.02.1795-இல் பதவி நீக்கம் செய்யப்பட்டு