பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாங்கூர்ப் புருடோத்தமன்

83

கொங்கைகள் போல் தோற்றம் அளிக்கின்றன; அங்கு மலர்ந்திருக்கும் அரக்காம்பல் மலர்களை நோக்கின், அவை அவ்வூர் மகளிரின் செவ்விதழ்களை நினைவூட்டுகின்றன; செவ்வி பெற மலர்ந்த செந்தாமரைப் பூக்களை நோக்கின், அவை அவ்வூர் மங்கையரின் முகங்களாகத் தோற்றம் அளிக்கின்றன (6). பாக்குச் சோலைகளின் நடுவே தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன; அவற்றினின்றும் முதிர்ந்த பெருத்த காய்கள் இற்றுக் குளங்களில் விழுகின்றன; இவற்றின் பேரொலியைக் கேட்ட மீன்கள் தங்களை இரையாகக் கொள்வதற்கு ஏதோ ஒன்று நீரில் குதித்துவிட்டது என்று வேறிடம் தேடித் துள்ளித் தாவுகின்றன. எம்பெருமானிடத்தில் காரணமின்றிப் பயந்து கலங்கும் பரிவுடையவர்களின் நிலைக்கு இது போலியாகும் என்று பணிப்பர் பெரியோர் (8). பெண் குரங்கு உட்கார்ந்த நிலையில் வாழைக் கனிகளை நுகர்ந்து தனது குட்டியை அணைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றுபோய் மாமரக் கிளைகளில் தங்கியிருக்கின்றது (9).

இனி, திருநாங்கூரின் வளத்தைப் பற்றி என்ன கூறுகின்றார் என்பதைக் கவனிப்போம். தில்லை மூவாயிரம் நாங்கை நாலாயிரம் என்ற வழக்கு உண்டல்லவா? தில்லையில் மூவாயிர தீட்சிதர்கள் இன்று இராவிடினும் தீட்சிதர்கள் கூட்டம் இருக்கின்றது. நாங்கையில் நாலாயிரம் வைணவர்கள் இருந்திருக்கவேண்டும். ஆனால், இன்று அத்திபூத்த மாதிரி ஏதோ ஒன்றிரண்டு குடும்பங்கள் உள்ளன. அவர்களும் வறுமையால் வாடி மிகவும் மெலிந்துள்ளனர்.

திருமங்கையாழ்வார்,


நல்ல வந்தழல் மூன்றுநூல்
வேதம்ஐவேள் வியோடு ஆறங்கம்
வல்ல அந்தணர் மல்கிய
நாங்கூர்
[1]

(தழல் - நெருப்பு மூன்று . மூன்று அக்நி; வேள்வி - யாகம்; வல்ல - பயின்ற, மல்கிய - நிறைந்திருக்கப் பெற்ற)

என்று நாங்கையில் வாழ்ந்த (நாலாயிரம்) வைணவர்களைக் குறிப்பிடுவர். இங்கு வாழ்ந்த அந்தணர்கள் மூன்று அக்னிகளை வளர்த்தவர்கள்; நான்கு வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்கள்; ஐந்து வேள்விகளைச் செய்கின்றவர்கள்; வேதத்தின் அங்கங்கள் ஆறையும் தெளிவாக அறிந்தவர்கள். இத்தகையோர் இங்கு அதிகமாக வாழ்ந்திருந்தனர். இங்குள்ள மாடமாளிகைகள் விண்ணைத் தழுவியிருந்தன (கற்பனையில் கூறுவது; இந்த மாளிகையில் கட்டியிருந்த கொடிகள் விண்ணைத் தழுவி

  1. பெரி. திரு. 4.2.2