பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல் முகம்

நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!
நிலாத்திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி
ஊரகத்தாய்! தண்துறைநீர் வெஃகா உள்ளாய்!
உள்ளுவார் உள்ளத்தாய்! உலகம் ஏத்தும்
காரகத்தாய்! சார்வானத்து உள்ளாய்! கள்வா!
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய்! பேராதுஎன் நெஞ்சில் உள்ளாய்!
பெருமான்உன் திருவடியே பேணி னேனே![1]

- திருமங்கையாழ்வார்

இந்த வரிசை நூல்களில் இறுதியாக வெளிவரும் இந்த நூலின் நூல்முகத்தைத் தொடங்கும்போது என் சுயபுராணத்தில் சில பக்கங்களைப் புரட்டத் தோன்றுகின்றது. இதோ என் இலக்கிய வாழ்க்கையின் ஒரு பகுதி. 1941 ஜுன் முதல் நாள் பி.எஸ்ஸி., எல்.டி., பட்டங்களுடன் யானே முன்னின்று தொடங்கிய உயர்நிலைப்பள்ளி வளர்ச்சியுடன் அதன் தலைமையாசிரியனாக என் அலுவலக வாழ்க்கையும் தொடங்கியது. அப்பொழுது ‘பி.எச்.டி. பட்டம் பெற வேண்டும்’ என்ற எண்ணமும் ஆசையும் என்று கூடச் சொல்லலாம் என்பால் அரும்பியது. மூன்று ஆண்டுகள் ஆசிரியத்துறை அநுபவம் பெற்றதும் எம்.ஏ. தேர்வு எழுத முயன்றேன். பி.எஸ்ஸி தேர்வு தனியார் எழுத முடியாது. பி.ஏ. பட்டம் பெற முயன்றேன். எந்தப் பட்டங்களும் இல்லாத ஆசிரியர்க்குத்தான் இந்தச் சலுகை உண்டு என்ற சம்பிரதாயத்தைக் கூறி அதற்குச் சென்னைப் பல்கலைக்கழகம் மறுத்தது. அச்சகை ஆசிரியர்க்குரிய உரிமையாகும் என்று பதிவாளரிடம் வாதாடினேன். பலன்? எதிர்முறையில் என்

  1. திருநெடுந். 8