பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நாங்கூர் நந்தாவிளக்கு திவ்வியதேச யாத்திரையாகச் சென்ற மதுரகவிகள் அயோத்தியிலிருக்கும்போது தென்திசையில் வானத்தில் ஒரு பேரொளிப் பிழம்பு தோன்றுகின்றது. அதனை நோக்கி அவர் நடக்க அதுவும் தென்திசையிலேயே நகர்ந்து செல்கின்றது. இதனைக் கவனித்தே நடக்கும் மதுரகவிகள் தெற்கே வரவர ஒளிப்பிழம்பும் உறைப்பில் குறைந்து வரக் காண்கின்றார். இறுதியில் இவர் திருக்குருகூர் திருத்தலத்திற்கு வருங்கால் அவர் கண்ட பேரொளி ஒரு புளியமரத்தில் அடங்குகின்றது. அதன் அடியில் ஓர் அழகிய குழந்தையைக் காண்கின்றார். கண்மூடி மெளனியாகி இருக்கும் குழந்தைமுன் ஒரு சிறு கல்லைப் போடுகின்றார். உறங்காத் திருப்புளியாழ்வாரின் கீழ் உள்ளத்தால் உறங்காத அக்குழந்தை தன் திருக்கண்களைத் திறந்து மதுரகவிகளை நோக்குகின்றது. மதுரகவிகள் அக்குழந்தையை நோக்கி, செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? என்று வினவுகின்றார். அக்குழந்தை அதற்கு, அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்று மறுமொழி பகர்கின்றது. எதிரும் புதிருமாக இருக்கும் இந்த வினாவிடை வைணவ சமயத்தின் சாரமாகத் திகழ்கின்றது. வைணவ சமயத்தின் தத்துவம் மூன்று. அவை சித்து, அசித்து, ஈசுவரன் என்பவை. சித்து என்பது அறிவுடைய ஆன்மா. அசித்து என்பது உயிரற்ற பொருள்களான பஞ்ச பூதங்கள் மற்றும் இவற்றின் சேர்க்கையால் ஏற்பட்ட சடப் பொருள்கள். சித்து, அசித்து என்ற இரண்டும் ஈசுவரனது திருமேனியாகத் திகழ்கின்றன. இதனைச் சரீர - சரீரி பாவனை என்று பேசும் வைணவ தத்துவம். மேற்குறிப்பிட்ட எதிரும் புதிருமாகத் தோன்றும் வினாவிடையில் இத்தத்துவம் அடங்கியிருப்பதைச் சிந்திக்கின்றோம்.