பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி செத்தது என்பது உயிரற்றது. அஃதாவது அசித்து அல்லது அசேதநம். நமது உடல் அசித்தாலானது. அசேதநமான இந்த உடலின் நடுவில் - அதாவது வயிற்றில் (இதயத்தில்) இருப்பது ஆன்மா. இஃது அணுஅளவாக அதாவது சிறியதாக இருப்பது. இது சேஷத்துவ பாரதந்திரியங்களாகின்ற தருமங்களை உடையதாக, ஈசுவரனால் இரட்சிக்கப்பெறும் பொருளாய் அறிவே வடிவமாக இருப்பது. பிறந்தால் சிறிதாக, அணு அளவாக இருக்கும் இந்தச் சீவான்மா பஞ்ச பூதச் சேர்க்கையாலான - அசித்து சம்பந்தமான இந்த உடம்பிலே சேர்ந்துகொண்டு இந்த மண்ணுலகிலே பிறவியைத் தொடங்கிவிட்டால், அஃதாவது, செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்? பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலான உடம்பில் சீவான்மா கலந்து இந்த தேக யாத்திரையைத் தொடங்குகின்றது என்பது தத்துவத்தின் உட்பொருளாகும். எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? - எதைத் தனக்கு உணவாகக்கொண்டு, அதாவது எதனைத் தொடர்ந்த சாதனமாகக் கொண்டு, எதனைக் குறிக்கோள் எனக் கொண்டு வாழும்? சடகோபரின் மறுமொழி. அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்பது. அந்த உடலில் ஏற்படும் சுகதுக்கங்களை உணவாகக் கொண்டு அந்தச் சுகதுக்கங்களுக்குக் காரணமான உடலிலேயே உழன்று கொண்டிருக்கும். சுகதுக்கங்களுக்கு ஏதுவான உடலையே தஞ்சம் எனக்கொண்டு சீவான்மா பற்றிக் கொண்டிருக்கும். இஃது உல கோரின் இயல்பு என்பது மதுரகவிகளுக்குத் தெரியாதது அன்று. ஆனால், மதுரகவிகளின் வினா இந்தச் சாதாரண இயல்பைத் தெரிந்து கொள்வதற்கு அன்று. எல்லோரும் சாதாரணமாக அறிந்த இதனைத் தெரிந்து கொள்ளவா அயோத்தியிலிருந்து திருக்குருகூருக்கு வரவேண்டும்? அவருடைய வினா இதனை அறிந்துகொள்ள விடுக்கவில்லை. “ஐம்பெரும் பூதங்களால் ஆன உடம்பில் தேவரீர் எதை உணவாகப் பற்றிக் கொண்டுள்ளீர்? மற்ற உயிர்களைப் போலத் தேவரீரும் ஏன் உடம்பின் காரணமாகச் சுகதுக்கங்களில் உழலவில்லை? இவற்றிற்குக் காரணமான உடலையே ஏன் தஞ்சம் எனப் பற்றிக் கொண்டிருக்கவில்லை? உலக வழக்கிற்கு மாறாக உண்ணாமலும் உரையாடாமலும் இந்தப் புளியாழ்வாரின் கீழ் கிடப்பது ஏன்? இந்த வினாக்களுக்கெல்லாம் தெளிவு ஏற்படுமாறு சடகோபரின் விடை அமைந்திருக்கின்றது. 1. இதயத்தில் ஈசுவரன் கட்டை விரலின் அளவில் தங்கியிருப்பதாக வைணவ தத்துவம் நுவல்கின்றது.