பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர் நந்தா விளக்கு | 0 | நெஞ்சமே! நல்லை! நல்லை! உன்னைப் பெற்றால் என்செய் யோம்?இனி என்ன குறைவினம்? மைந்த னைமல ஏாள்மண வாளனைத் துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய்." (நெஞ்சு - மனம், நல்லை - நன்மையுடையை என் செய்யோம் - எதைத்தான் செய்ய மாட்டோம் மைந்தன் - இளையவன்; மலராள் - திருமகள்; துஞ்சுதல் - மறத்தல்; விடாது - விடாமல்; தொடர் - நில்) என்ற நம்மாழ்வார் பாசுரமும் ஈண்டுக் கருதத்தக்கது. மேல் விழுந்து தொழுத நெஞ்சைக் கொண்டாடி "என்றைக்காவது நான் நைச்சியாதுசந்தானம் பண்ணிப் பிரியப் பார்த்தவிடத்திலும் நீ எம்பிரானை விடாமல் தொடர வேண்டும்” என்று தன் நெஞ்சை இரக்கின்றார் ஆழ்வார். நாங்கூர் - வடமொழியில் நாகபுரி என வழங்கும். அழகிய மாடமாளிகை வீடுகள் நிறைந்த தலத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் காரணம் பற்றி இத்திருத்தலத்திற்கு, திருமணி மாடக்கோயில் என்ற பெயர் ஏற்பட்டது போலும். ஆண்டுதோறும் தை அமாவாசையன்று நாங்கூரைச் சேர்ந்த பதினொரு திருக்கோயில் எம்பெருமான்களும் தங்கக் கருட வாகனங்கள்மீது காலையில் எழுந்தருளி மாலை வரையிலும் இத்திருத்தலத்தில் தங்குவார்கள். இதற்கென இத்திருக்கோயிலில் வரிசையாகத் தனித்தனி மண்டபங்கள் உள்ளன. எல்லோரும் இரவில் கருடசேவை தருகின்றனர். திருமங்கையாழ்வார் அன்னவாகனத்தின் மீது எழுந்தருளுவார். ஆண்டு முழுவதும் பதினொரு தங்கக் கருட வாகனங்களும் பாதுகாப்பாக இத்திருக்கோயிலிலேயே வைக்கப் பெற்றுள்ளன. எம்பெருமான்கள் இந்த விழாக்கோலம் கொள்வதற்குச் சென்னையிலுள்ள பல வைசியர்கள் செலவை ஏற்கின்றனர் என்பதாக அறிகின்றோம். இச்செய்தியை அறிந்தவண்ணம் மன நிறைவுடன் திருத்தெற்றியம்பலம் என்ற திவ்விய தேசத்தை நோக்கி வருகின்றோம். 14. திருவாய். 1.10:4